சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாட்டம்


சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 17 Jan 2020 4:30 AM IST (Updated: 17 Jan 2020 2:00 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகை திருவிழாவின் 2-வது நாளான நேற்று சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் மாட்டுப்பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சேலம்,

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் 2-வது நாளான நேற்று உழவுக்கும், விவசாயிக்கும் உறுதுணையாக விளங்கும் மாடுகளின் உழைப்பை பாராட்டும் வகையில் மாட்டுப்பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டது. சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாட்டுப்பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவையொட்டி விவசாயிகள் தங்களது வீட்டில் வளர்க்கும் மாடுகளை நன்றாக குளிப்பாட்டி, பல்வேறு விதமாக அலங்கரித்தும், உடம்பில் பலவண்ண பொடிகளை தூவியும், கொம்புகளை அலங்கரித்தும் அவற்றுக்கு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் மாட்டின் பழைய தாம்புக்கயிறு மாற்றப்பட்டு, புதிய தாம்புக்கயிறு கட்டினர். பின்னர் மாடுகளுக்கு பொங்கல், செங்கரும்பு, வாழைப்பழங்கள் ஆகியவற்றை வழங்கினார்கள்.

வண்டி மாடுகள்

இதுபோல சேலம் கன்னங்குறிச்சி, புதுஏரி, ஏரிக்காடு, செட்டிச்சாவடி, மன்னார்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாட்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல விவசாயிகள் தங்கள் வீட்டின் முன்பு கோலமிட்டு மண்பானையில் பொங்கல் வைத்து மாடுகளுக்கு படைத்து விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், சர்க்கரை பொங்கலை மாடுகளுக்கு கொடுத்தனர்.

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் கோசாலையில் உள்ள மாடுகளை கோவில் ஊழியர்களால் குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம், திருநீறு பூசி அழகுப்படுத்தினர். இதனை தொடர்ந்து சர்க்கரை பொங்கல் வைத்து கரும்பு, பழம் ஆகியவை படையலிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.மேலும் பக்தர்கள் கோசாலையில் உள்ள மாடுகளுக்கு பழங்களை வழங்கினர்.

சேலம் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட்டில் மாட்டு வண்டிகளில் லோடுகள் அடிக்கும் தொழிலாளர்கள் தங்கள் வண்டி மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து பூஜை செய்தனர்.

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், கோட்டை பெருமாள் கோவில், 2-வது அக்ரஹாரம் காசிவிஸ்வநாதர் கோவில், டவுன் ராஜகணபதி கோவில், அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணியசாமி கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் உள்பட மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.

விளையாட்டு போட்டிகள்

பொங்கல் விழாவையொட்டி சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் பானை உடைத்தல், பலூன் உடைத்தல், ஓட்டப்பந்தயம், கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதே போல தேவூர் பகுதியில் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தெற்கு தோட்டம் பகுதியில் விவசாயிகள் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசினார்கள். மேலும் மாட்டு சாணத்தால் விநாயகர் செய்து, சிறப்பு பூஜை செய்தனர். மேலும் கால்நடைகளுக்கு முன்பு பொங்கல் வைத்தனர். பின்னர் பொங்கலை கால்நடைகளுக்கு வழங்கினார்கள்.

Next Story