அவினாசி அருகே வாகன சோதனையில் 5½ கிலோ கஞ்சா சிக்கியது ஒருவர் கைது


அவினாசி அருகே வாகன சோதனையில் 5½ கிலோ கஞ்சா சிக்கியது ஒருவர் கைது
x
தினத்தந்தி 16 Jan 2020 11:00 PM GMT (Updated: 16 Jan 2020 9:08 PM GMT)

அவினாசி அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் காரில் கடத்தி வரப்பட்ட 5½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. காரில் வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

அவினாசி,

திருப்பூர் மாவட் டம் அவினாசியை அடுத்த நம்பியாம்பாளையம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக் தங்கம், அண்ணாதுரை மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது காரின் பின் இருக்கையில் இருந்த இருவர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டனர். காரின் முன் இருக்கையில் இருந்த ஒருவர் மட்டும் பிடிபட்டார்.

5½ கிலோ கஞ்சா சிக்கியது

பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குன்னூர் குறிஞ்சி நகரை சேர்ந்த சிவா என்ற சிவக்குமார் (49) என்பதும் தப்பி ஓடிய 2 பேர்களில் ஒருவர் தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்த வீரக்குமார் (வயது 40) என்பதும் மற்றொருவர் ஜெரால்டு (36) என்பதும் தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் மதுரை செம்பட்டி பகுதியிலிருந்து கஞ்சா கடத்திக்கொண்டு பஸ்சில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு வந்துள்ளனர். அப்போது பஸ் திருப்பூர் பஸ் நிலையத்தில் நின்றபோது 3 பேரும் கஞ்சாவுடன் கீழே இறங்கி அப்பகுதியில் கார் வாடகைக்கு விடும் நிறுவனத்திற்கு போன் செய்து அந்த காரில் கஞ்சா பொட்டலத்தை காரின் டிக்கியில் வைத்து கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து அவினாசி கோர்ட்டில் ஒப்படைத்தனர். மேலும் அவரிடமிருந்த 5½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் காரை ஓட்டி வந்த டிரைவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். காரிலிருந்து தப்பி ஓடிய மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story