தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்து: சென்னையைச் சேர்ந்த 2 பேர் சாவு


தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்து: சென்னையைச் சேர்ந்த 2 பேர் சாவு
x
தினத்தந்தி 17 Jan 2020 4:15 AM IST (Updated: 17 Jan 2020 2:57 AM IST)
t-max-icont-min-icon

தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திருவொற்றியூர், 

சென்னை புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிபின் (வயது 29). அயனாவரம் சோமசுந்தரம் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் யுகேஷ்குமார்(29). கொளத்தூரை சேர்ந்தவர் யுவராஜ் (29). மாதவரம் அடுத்த வினாயகபுரத்தை சேர்ந்தவர் சித்திக் (25). நண்பர்களான இவர்கள் 4 பேரும் ஆந்திர மாநிலம் தடா அருகே உள்ள வரதையாபாளையம் அருவிக்கு சுற்றுலா செல்வதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு சென்றனர். காரை பிபின் ஓட்டிச்சென்றார். முன் இருக்கையில் யுகேஷ் குமாரும் மற்ற இருவரும் பின் இருக்கையிலும் அமர்ந்து பயணம் செய்தனர்.

நேற்று அதிகாலை கார், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையான சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கோரிமேடு என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையில் நடுவில் இருந்த தடுப்புச்சுவர் மீது எதிர்பாரத விதமாக கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

இதில் காரை ஓட்டிச்சென்ற பிபின் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த யுகேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த சித்திக் மற்றும் யுவராஜ் இருவரும் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த விபத்தில் பலியான யுகேஷ் குமார் அயனாவரத்தில் கோழி கறி கடை நடத்தி வந்தார். இவருக்கு நிரேஷா (29) என்ற மனைவியும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பலியான மற்றொரு நபரான காரை ஓட்டிச்சென்ற பிபினுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த விபத்தால் நேற்று அதிகாலை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வெங்கடாசலம் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் குமணன் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்.

Next Story