புதுவை சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி - சிவா எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு


புதுவை சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி - சிவா எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 17 Jan 2020 4:00 AM IST (Updated: 17 Jan 2020 3:56 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. பேசினார்.

புதுச்சேரி,

உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் திருவள்ளுவர் தினவிழா நேற்று நடந்தது. விழாவில் தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசியதாவது:-

புதுவையில் நாம் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து போராடி வந்துள்ளோம். தற்போது நாம் பேசவேண்டிய காலம் வந்துவிட்டது. மாநிலத்தின் அடிப்படை பிரச்சினைகள், மக்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்காக போராடுங்கள் என்று கட்சி தலைமை பச்சைக்கொடி காட்டியுள்ளது.

புதுவையில் தி.மு.க.வினர் அமைச்சர் பதவி வேண்டாம் என்று தியாகம் செய்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் என்ற கசப்பான உண்மையை மூத்த தலைவர் துரைமுருகன் கூறினார். கூட்டணியில் இருந்ததால் நம்மால் ஓரளவுக்கு மேல் பேசமுடியவில்லை.

பொதுப்பணித்துறை உள்ளிட்ட பலதுறைகள் தோல்வியடைந்துவிட்டன. நலத்திட்டங்களை கவர்னர் தடுக்கிறார் என்று காங்கிரஸ் கூறினாலும் ஓரளவுக்கு மேல் அதை நம்ப மக்கள் தயாராக இல்லை. எனவே மக்கள் நம்பிக்கையை பெற நாம் போராட வேண்டும். இனிவரும் காலம் தி.மு.க.வுக்கானது.

நம்மைப்போல் 20 ஆண்டு காலம் புதுவையில் காங்கிரஸ் ஆட்சி இல்லாமல் இருந்திருந்தால் எங்கே போயிருக்கும். ஒருமுறை ஆட்சியை இழந்ததற்கே என்.ஆர்.காங்கிரஸ் காணாமல் போய்விட்டது. கடந்த தேர்தலில் சில இடங்களில் நாம் குறைந்த வாக்குவித்தியாசத்திலேதான் தோல்வியை சந்தித்தோம். இதற்கு கூட்டணியில் இருந்தவர்களே ஆட்களை நிறுத்தியதுதான் காரணம். வரும் சட்டமன்ற தேர்தலை நாம் கருணாநிதி ஆசியுடன் தனித்து சந்திப்போம். புதுவையில் தி.மு.க. ஆட்சி மலர செய்வோம்.

இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.

தெற்கு மாநில தி.மு.க. அலுவலகத்தில் நடந்த திருவள்ளுவர் தின விழாவில் மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு திருவள்ளுவர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார் பொருளாளர் சண்.குமாரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், புதுவை தமிழ்ச்சங்க தலைவர் முத்து, செயலாளர் பாலசுப்ரமணியன், பொருளாளர் சீனுமோகன்தாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story