தேர்தல் முடிவுக்கு முன்னரே தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா தொடர்பில் இருந்தது சஞ்சய் ராவத் எம்.பி. பரபரப்பு பேட்டி
மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் முடிவுக்கு முன்னரே தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா தொடர்பில் இருந்தது என சஞ்சய் ராவத் எம்.பி.கூறினார்.
மும்பை,
மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் முடிவுக்கு முன்னரே தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா தொடர்பில் இருந்தது என சஞ்சய் ராவத் எம்.பி.கூறினார்.
சிவசேனா கூட்டணி அரசு
மராட்டிய சட்டசபைக்கு கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் முதல்-மந்திரி பதவியை விட்டு கொடுக்க மறுத்ததால் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியாக தேசியவாத காங்கிரஸ் உருவெடுத்தது.
மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாமல் அரசியல் குழப்பம் நிலவிய போது, மக்கள் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணிக்கு தான் வாக்களித்து இருக்கிறார்கள். அவர்கள் தான் ஆட்சி அமைக்க வேண்டும். தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என சரத்பவார் கூறி வந்தார்.
ஆனால் அரசியல் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் 3 கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைத்தன. புதிய அரசு அமைந்து 1 மாதம் கடந்து உள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்காக சட்டசபை தேர்தல் முடிவுக்கு முன்னரே தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா தொடர்பில் இருந்ததாக தற்போது பரபரப்பு தகவலை சஞ்சய் ராவத் எம்.பி வெளியிட்டு உள்ளார்.
5 ஆண்டுகளை பூர்த்தி செய்வோம்
இது தொடர்பாக புனேயில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு அமைய முதலில் முடிவு செய்தது சரத்பவார் தான். இந்த புதிய கூட்டணி உருவாக நான் தொடர்ந்து பணியாற்றினேன். எங்கள் அரசாங்கம் ஒரு சோதனைக் குழாய் குழந்தையை போன்றதல்ல. இது முறையாக பிறந்தது. அதற்கு பெயரும் சூட்டப்பட்டு விட்டது. இந்த அரசாங்கம் தனது முதல் பிறந்தநாளையும் கொண்டாடும். இதை கிச்சடி அரசாங்கம் என அழைக்க முடியாது. 5 ஆண்டுகளையும் இந்த அரசு பூர்த்தி செய்யும்.
எங்கள் 3 கட்சிகளுக்கும் அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் 3 கட்சி தலைவர்களும் நாட்டை நேசிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் முடிவுக்கு முன்பே...
சட்டசபை தேர்தல் முடிவுக்கு முன்னரே ஆட்சி அமைப்பதற்காக தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சிவசேனா தொடர்பில் இருந்ததா என்ற கேள்விக்கு பதில் அளித்த சஞ்சய் ராவத், அப்படி சொல்ல முடியும். ஏனெனில் பாரதீய ஜனதா தேர்தலில் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவியை பகிர்வது தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற முன்வராது என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும். தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டின் போதே எங்களுக்கு இது தெரிந்து விட்டது என்று கூறினார்.
Related Tags :
Next Story