என் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் நமச்சிவாயத்துக்கு அதிகாரமில்லை - தனவேலு எம்.எல்.ஏ. சொல்கிறார்


என் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் நமச்சிவாயத்துக்கு அதிகாரமில்லை - தனவேலு எம்.எல்.ஏ. சொல்கிறார்
x
தினத்தந்தி 17 Jan 2020 4:30 AM IST (Updated: 17 Jan 2020 4:28 AM IST)
t-max-icont-min-icon

என் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவரான அமைச்சர் நமச்சிவாயத்துக்கு அதிகாரம் இல்லை என்று தனவேலு எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி, 

புதுவை அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிய பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் நேற்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து தனவேலு எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்பவன் அல்ல. அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பாக நடவடிக்கைதான் கேட்கிறேன். என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க புதுவை மாநில தலைவரான அமைச்சர் நமச்சிவாயத்துக்கு அதிகாரம் இல்லை. என் மீது சோனியாகாந்திதான் நட வடிக்கை எடுக்க முடியும்.

புதுவை மாநிலத்தில் நடக்கும் ஊழல்களை நான் வெளிக்கொண்டுவந்தேன். எனது தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதியில்லாததால் தொகுதி மக்களுக்காக போராட்டம் நடத்தினேன். இதுதொடர்பாக என்னை முதல்-அமைச்சரோ, காங்கிரஸ் தலைவரோ அழைத்து என்னவென்று கேட்டதில்லை.

நான் தொடர்ந்து ஊழல்களை வெளிக் கொண்டுவந்து கொண்டேதான் இருப்பேன். ஆனால் இப்போது என் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாக திசை திருப்புகிறார்கள். அவர்கள் மீதான தவறுகளை வெளிக்கொண்டு வருவதால் இவ்வாறு செய்கிறார்கள். எனக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினால் அதற்கு நான் பதில் தருவேன்.

முதல்-அமைச்சர் நாரா யணசாமிக்கு புதுவை மக்கள் மீது அக்கறை இல்லை. இந்த ஆட்சியில் அமைச்சர்கள் அதிகப்படியாக சொத்துகளை வாங்கி குவித்து உள்ளனர். அவர்கள் தங்களை திருத்திக்கொள்வார்கள் என்று நினைத்தேன். நான் கை சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வானேன். தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருப்பேன்.

இவ்வாறு தனவேலு எம்.எல்.ஏ. கூறினார்.

அவரிடம், நீங்கள் ஆட்சிமாற்றத்துக்கு முயற்சித்ததாக அரசு கொறடா அனந்தராமன் புகார் கூறியுள்ளாரே? என்று கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்து தனவேலு எம்.எல்.ஏ. கூறியதாவது:-

ஆட்சி மாற்ற புகார் எப்போது வந்தது? அதன்மீது இவ்வளவு நாட்களாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நான் சட்டசபையில் ஏற்கனவே அமைச்சர்களுடன் பலமுறை விவாதம் நடத்திஉள்ளேன். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியே பிளவுபட்டு உள்ளது. முதல்-அமைச்சர் ஒருபுறமும், காங்கிரஸ் தலைவரான நமச்சிவாயம் ஒருபுறமும் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இடையே நடந்த பிரச்சினையில் கட்சி தலைமையிலிருந்து நமச்சிவாயத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நான் அப்போது, நமச்சிவாயத்தை கட்சி தலைவர் பதவியிலிருந்து மாற்றக்கூடாது என்று கூறி கட்சி மேலிட பார்வையாளரிடம் கடிதம் கொடுத்தேன். அந்த கடிதத்துக்கு ராகுல்காந்தியிடம் இருந்து பதிலும் வந்தது. நான் கடிதம் தந்ததால்தான் நமச்சிவாயம் பதவியில் நீடிக்கிறார். இதை நமச்சிவாயத்திடமே தெரிவித்துள்ளேன்.

கட்சிக்குள் யாருக்கும் நிம்மதியில்லை. கட்சிக்காரர்களின் எதிர்பார்ப்புகள் மூடி மறைக்கப்படுகிறது. ராகுல் காந்தி, சோனியாகாந்தியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவர்களை சந்தித்து அமைச்சர்களின் ஊழல் புகார்களை தெரிவிப்பேன்

இவ்வாறு தனவேலு எம்.எல்.ஏ. கூறினார்.

சட்டசபையில் சபாநாயகரிடம் ஊழல் தொடர்பாக புகார் தெரிவிப்பீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவரே இதில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

Next Story