என்னிடம் சக்தியை வீணாக்கவேண்டாம்: உங்கள் கட்சி எம்.எல்.ஏ.விடம் சவால் விடுங்கள் - நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி பதில்


என்னிடம் சக்தியை வீணாக்கவேண்டாம்: உங்கள் கட்சி எம்.எல்.ஏ.விடம் சவால் விடுங்கள் - நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி பதில்
x
தினத்தந்தி 16 Jan 2020 11:34 PM GMT (Updated: 16 Jan 2020 11:34 PM GMT)

என்னிடம் உங்கள் சக்தியை வீணாக்கவேண்டாம் என்றும் உங்கள் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு சவால் விடுங்கள் என்றும் கவர்னர் கிரண்பெடி பதில் அளித்துள்ளார்.

புதுச்சேரி, 

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அவரது மகன் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான தனவேலு நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடியும் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, நில அபகரிப்பில் ஈடுபட்டதை நிரூபித்தால் பதவி விலக தயார் என்றும், அவ்வாறு நிரூபிக்காவிட்டால் கவர்னர் கிரண்பெடியும், தனவேலு எம்.எல்.ஏ.வும் பொதுவாழ்க்கையில் இருந்து விலக தயாரா? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சரின் கூற்று தவறானது. அவர் தனது கட்சி எம்.எல்.ஏ.வுக்குத்தான் சவால்விட வேண்டும். அவர் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அவர்தான் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

நில பரிவர்த்தனையில் உங்களுக்கும், உங்கள் மகனுக்கும் எதிராக தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார். அவர் என்னிடம் வந்தபோது, நான் ஆதாரங்கள் இருந்தால் சி.பி.ஐ.க்கு சென்று ஒப்படைக்க அறிவுறுத்தினேன். எனவே எனக்கு சவால்விட வேண்டாம்.

விசாரணை அமைப்பு விசாரித்தால் அதற்கு முன்பாக எதிர்கொள்ளுங்கள். ஆதாரங்களை பொது தளத்தில் வைக்க உங்கள் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு நீங்கள் சவால் விடலாம். அல்லது சட்ட சபையின் சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து அதை சட்டசபையில் வைக்க சொல்லுங்கள். தயவு செய்து உங்கள் சக்தியை என்னிடம் வீணாக்காதீர்கள். உங்கள் சொந்த கட்சி எம்.எல்.ஏ.வை கையாளுவதில் கவனம் செலுத்துங்கள்.

இவ்வாறு அந்த பதில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

Next Story