எடியூரப்பா நாளை வெளிநாடு பயணம்: கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் மீண்டும் தள்ளிப்போகிறது


எடியூரப்பா நாளை வெளிநாடு பயணம்: கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் மீண்டும் தள்ளிப்போகிறது
x
தினத்தந்தி 18 Jan 2020 4:30 AM IST (Updated: 17 Jan 2020 10:49 PM IST)
t-max-icont-min-icon

எடியூரப்பா நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளிநாடு பயணம் மேற்கொள்வதால் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் மேலும் தள்ளிப்போகிறது.

பெங்களூரு, 

எடியூரப்பா நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளிநாடு பயணம் மேற்கொள்வதால் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் மேலும் தள்ளிப்போகிறது. இதனால் மந்திரி பதவியை எதிர்நோக்கிய எம்.எல்.ஏ.க்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

12 தொகுதிகளில் வெற்றி

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து விலகி பா.ஜனதாவுக்கு வந்தவர்களுக்காக மந்திரிசபையில் 16 இடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளன. சட்டசபையில் காலியாக இருந்த 15 இடங்களுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் 11 பேர் தகுதிநீக்கப்பட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்.

ஒருவர் மட்டும் புதியவர். அந்த 11 பேருக்கும், இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த எச்.விஸ்வநாத், எம்.டி.பி.நாகராஜ் ஆகியோருக்கும் மந்திரி பதவி வழங்க முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசித்து வருகிறார். ஆனால் பா.ஜனதா மேலிடமோ, அவர்களில் 8 பேருக்கு மட்டுமே மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மகர சங்கராந்தி பண்டிகைக்குள் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய எடியூரப்பா முடிவு செய்திருந்தார். ஆனால் பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிப் போனது.

மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிப்போகிறது

இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா, தனது வெளிநாட்டு பயணத்திற்கு முன்பு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறினார். அவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கிடையில் இன்னும் ஒரு நாள் மட்டுமே காலஅவகாசம் உள்ளது.

இந்த நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் தற்போதைக்கு இல்லை என்றும், எடியூரப்பா வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு கர்நாடகம் திரும்பிய பிறகே அதுபற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதனால் மந்திரிசபை விரிவாக்கம் மீண்டும் தள்ளிப்போகிறது.

எம்.எல்.ஏ.க்கள் ஏமாற்றம்

இதனால் மந்திரி பதவியை எதிர்நோக்கியுள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் உமேஷ்கட்டி எம்.எல்.ஏ., எம்.டி.பி.நாகராஜ் உள்ளிட்டோர் எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது மந்திரிசபையை விரைவாக விரிவாக்கம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும், தங்களுக்கு பதவி வழங்குமாறு கேட்டதாகவும் கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Next Story