வன்னியன் விடுதியில் ஜல்லிக்கட்டு; 51 பேர் காயம்


வன்னியன் விடுதியில் ஜல்லிக்கட்டு; 51 பேர் காயம்
x
தினத்தந்தி 18 Jan 2020 4:00 AM IST (Updated: 17 Jan 2020 11:25 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 51 பேர் காயமடைந்தனர்.

ஆலங்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில், தை பொங்கலை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி மாயன் பெருமாள் கோவிலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில், மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், மெய்யநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதை யடுத்து மாவட்ட வருவாய் அதிகாரி நெடுஞ்சாலை துறை ஜானகி கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 650-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் முட்டியதில் வீரர்கள் 11 பேர், பார்வையாளர்கள் 29 பேர், மாட்டின் உரிமையாளர் 11 என மொத்தம் 51 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மணிவாசகம் மட்டும் மேல்சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கும், வடகாட்டை சேர்ந்த மாணிக்கம் மகன் வெங்கடேசன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் தங்கம், வெள்ளி நாணயங்கள், சைக்கிள், மிக்சி, சில்வர் பாத்திரங்கள், நாற்காலிகள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியை காண அ.தி.மு.க. ஒன்றியச்செயலாளர் ராஜேந்திரன், தாசில்தார் வரதராஜன், வட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், சமூகநலத் தாசில்தார் யோகேஸ்வரன், தேர்தல் துணை வட்டாட்சியர் ரவின்குமார், வருவாய் ஆய்வாளர்கள் சாந்தி, ராணி மற்றும் ஆலங்குடி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் வன்னியன் விடுதி பொதுமக்கள் செய்திருந்தனர். ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story