பெங்களூருவில் மேலும் 2 பயங்கரவாதிகள் கைது தமிழக சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்பா? போலீஸ் விசாரணை


பெங்களூருவில் மேலும் 2 பயங்கரவாதிகள் கைது தமிழக சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்பா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 18 Jan 2020 4:00 AM IST (Updated: 17 Jan 2020 11:47 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ேமலும் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு, 

பெங்களூருவில் ேமலும் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். தமிழக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் இவர்களுக்கு தொடர்பா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைவர்களை தீர்த்து கட்ட...

சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெங்களூரு குரப்பனபாளையாவில் வாடகை வீட்டில் வசித்து வந்த 3 பயங்கரவாதிகளை கடந்த 7-ந் தேதி சென்னை கியூ பிரிவு போலீசார், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து கைது செய்திருந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், கோலாரில் பதுங்கி இருந்த 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் தமிழ்நாடு களியக்காவிளையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பயங்கரவாதிகளும் உடுப்பியில் வைத்து தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த பயங்கரவாதிகள் பெங்களூரு உள்பட தென்மாநிலங்களில் தாக்குதல் நடத்தவும், இந்து அமைப்புகளின் தலைவர்களை தீர்த்து கட்டவும் சதி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.

மேலும் 2 பயங்கரவாதிகள் கைது

இந்த நிலையில், பெங்களூரு ஜெயநகர் பகுதியில் பதுங்கி இருந்த மேலும் 2 பயங்கரவாதிகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு படை போலீசார் இணைந்து கைது செய்துள்ளனர். இவர்கள் தடை செய்யப்பட்ட அல்-உம்மா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மெகபூப் பாஷா(வயது 45) மற்றும் முகமது மன்சூர்கான் என்று தெரிய வந்துள்ளது. இவர்களில் மெகபூப் பாஷா, பெங்களூரு குரப்பனபாளையாவை சேர்ந்தவர். ஜிகாதி அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக மெகபூப் பாஷா இருந்துள்ளார்.

மேலும் கர்நாடகத்தில் அல்-உம்மா பயங்கரவாத அமைப்பை பலப்படுத்தும் பொறுப்பு மெகபூப் பாஷாவுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக அந்த அமைப்புக்கு இளைஞர்களை சேர்த்து விடுவது, அவர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட வேலைகளில் மெகபூப் பாஷா ஈடுபட்டு வந்துள்ளார். மெகபூப் பாஷாவுக்கு ஆதரவாக முகமது மன்சூர்கான் இருந்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.

இளைஞர்களுக்கு பயிற்சி

பெங்களூரு உள்பட தென்னிந்தியாவில் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களை கொலை செய்யவும், நாசவேலையில் ஈடுபடவும் திட்டமிட்டு உள்ளனர். குரப்பனபாளையாவில் உள்ள தனது வீட்டில் வைத்து நாசவேலையில் ஈடுபட மெகபூப் பாஷா சதி திட்டம் தீட்டி, இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுதவிர பயங்கரவாத அமைப்பில் சேரும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க சாம்ராஜ்நகா் மாவட்டம் குண்டலுபேட்டையில் நிலம் வாங்க மெகபூப் பாஷா முயற்சி செய்து உள்ளார். கடந்த 7-ந் தேதி தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்ட இம்ரான் கானுக்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை மெகபூப் பாஷா வழங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கைதான பயங்கரவாதிகள் 2 பேருக்கும் தமிழ்நாடு களியக்காவிளையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலையில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஏற்கனவே பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட குரப்பன பாளையாவில் உள்ள தனது வீட்டில் வைத்து சதி திட்டம் தீட்டியதாக சுத்தகுண்ட பாளையா போலீஸ் நிலையத்தில் மெகபூப் பாஷா உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story