கரூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி குதிரை வண்டி பந்தயம்


கரூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி குதிரை வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 18 Jan 2020 3:30 AM IST (Updated: 18 Jan 2020 12:06 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி குதிரை வண்டி பந்தயம் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசு வழங்கினார்.

கரூர்,

எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க.வின் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் குதிரை வண்டி பந்தயம் கரூர் பாலிடெக்னிக் கல்லூரி முன்பு ஈரோடு ரோட்டில் நேற்று மாலை நடந்தது. பெரிய குதிரை, நடுக்குதிரை, புதிய குதிரை என 3 பிரிவுகளில் பந்தயம் நடந்தது. இதில் பெரிய குதிரை வண்டி பந்தயத்தில் போக வர 10 மைல் தூரமும், நடுக்குதிரைக்கு 8 மைல் தூரமும், புதிய குதிரைக்கு 6 மைல் தூரமும் எல்கை நிர்ணயிக்கப்பட்டு பந்தயம் நடந்தது. இதில் திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து குதிரை வண்டிகளை அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர். 3 பிரிவுகளிலும் மொத்தம் 104 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.

முன்னதாக நடந்த தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, கொடியசைத்து குதிரை வண்டி பந்தயத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவருமான என்.தானேஷ் என்கிற முத்துக்குமார் தலைமை தாங்கினார். கீதா எம்.எல்.ஏ, மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது பந்தயத்தில் இலக்கை நோக்கி குதிரைகள் சீறிப்பாய்ந்தன. அப்போது சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை காண முடிந்தது. பந்தயத்தின் போது ஓரமாக நின்று கொண்டிருந்த ஒருவரை, குதிரை தட்டி விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் காயமின்றி அவர் தப்பினார்.

மேலும் குதிரைகள் ஓடுவதை இளைஞர்கள் உள்ளிட்டோர் செல்பி எடுக்க ஆர்வமாக திரண்டு இருந்தனர். இதைக்கண்ட போலீசார் லத்தியை வைத்து கொண்டு, குதிரைகள் ஓடுவதை செல்பி எடுப்பது உள்ளிட்ட விபரீத செயலில் யாரும் ஈடுபடாதீர்கள் என கூறி எச்சரிக்கை விடுத்தனர். குதிரை பந்தயம் நடப்பதையொட்டி கரூர்- ஈரோடு சாலை முனியப்பன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்தினை கண்காணித்தனர். தற்காலிகமாக ஈரோடு ரோட்டில் கார், லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வராதபடி பார்த்து கொண்டனர்.

குதிரை வண்டி பந்தயத்தில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். இதில் புதிய குதிரை பிரிவில் மொத்தம் 57 குதிரை வண்டிகள் பங்கேற்றதால், அவை 2 ஆக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்தன.

பெரியகுதிரை பிரிவில் திருச்சி உறையூர், சிவகங்கை தேவகோட்டை, கோவையும் மற்றம் நடுக்குதிரை பிரிவில் திருச்சி உறையூர், கரூர், திருச்சி உறையூரும், மற்றும் புதிய குதிரை பிரிவில் ஈரோடு பவானி, திருச்சி, தஞ்சை மற்றும் சேலம் ஆத்தூர், திருச்சி நாச்சியார் கோவில், திருச்சி உறையூர் குதிரைகள் முறையே முதல் 3 இடங்களை பிடித்தது குறிப்பிடத்தக்கது ஆகும். இதில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான எஸ்.திருவிகா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரெயின்போ சேகர், நகர செயலாளர்கள் வி.சி.கே.ஜெயராஜ், வெங்கமேடு பாண்டியன், கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், க.பரமத்தி ஒன்றியக்குழு தலைவர் மார்கண்டேயன், ஏமூர் ஊராட்சி தலைவர் வி.சி.கே.பாலகிருஷ்ணன், வேங்கை ராமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பந்தயம் முடிந்ததும் கரூர்-ஈரோடு ரோட்டில் வழக்கம்போல் வாகன போக்குவரத்து நடந்தது. 

Next Story