கர்நாடகத்தில் ‘ஆஷா’ ஊழியர்களுக்கு தலா ரூ.3,000 ஊக்கத்தொகை கர்நாடக மந்திரிசபை முடிவு


கர்நாடகத்தில் ‘ஆஷா’ ஊழியர்களுக்கு தலா ரூ.3,000 ஊக்கத்தொகை கர்நாடக மந்திரிசபை முடிவு
x
தினத்தந்தி 18 Jan 2020 4:00 AM IST (Updated: 18 Jan 2020 12:09 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ‘ஆஷா’ ஊழியர்களுக்கு தலா ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்க கர்நாடக மந்திரிசபை முடிவு செய்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் ‘ஆஷா’ ஊழியர்களுக்கு தலா ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்க கர்நாடக மந்திரிசபை முடிவு செய்துள்ளது.

கனிம சுரங்க முறைகேடு

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற கே.ஜி.போப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எம்.எல்.ஏ.க்கள் அரக ஞானேந்திரா, எஸ்.ஆர்.விஸ்வநாத், ஏ.டி.ராமசாமி, ராஜசேகர பசவராஜ் பட்டீல், ராஜூகவுடா ஆகியோர் உறுப்பினராக நியமனம் செய்யப் பட்டுள்ளனர். இந்த குழுவுக்கு கர்நாடக அரசு நில பாதுகாப்பு குழு என்று பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. கனிம சுரங்க முறைகேடு தொடர்பாக லோக்ஆயுக்தா விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை காலத்தை ஒரு ஆண்டு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்க கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது என்றும், இதற்காக ரூ.130 கோடி ஒதுக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

‘ஆஷா’ ஊழியர்கள்

ஒரு முறை தீர்வு அடிப்படையில் ஆஷா ஊழியர்களுக்கு தலா ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. பீனியா மற்றும் உப்பள்ளி தொழிற்பேட்டைகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரூ.68 கோடி நிதி ஒதுக்கப்படும். பெங்களூரு மற்றும் விஜயாப்புராவில் பயங்கர வாதிகளை அடைத்து வைக்க அதிக பாதுகாப்பு நிறைந்த கட்டிடங்கள் கட்டப்படும்.

பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள் விதிமுறைகளை மீறி கட்டிய கட்டிடங்களுக்கு 2 மடங்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி கட்டிய பகுதிக்கு மட்டும் இந்த வரி பொருந்தும். அத்தகைய கட்டிடங்கள் மீது இறுதி நடவடிக்கை எடுக்கப்படும் வரை இந்த வரி விதிப்பு அமலில் இருக்கும். இதுகுறித்து நாளை (இன்று) உத்தரவு பிறப்பிக்கப்படும்.

சர்க்கரை ஆலைகள்

யாதகிரி மற்றும் ஹாவேரியில் புதிதாக மருத்துவ கல்லூரி தொடங்கப்படும். இதற்கு ஆகும் செலவில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் வழங்கும். பாண்டவபுரா மற்றும் சுஞ்சனகட்டி சர்க்கரை ஆலைகளை 40 ஆண்டு களுக்கு தனியாருக்கு குத்தகைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மைசூரு மருத்துவ கல்லூரியில் மாணவர் விடுதி கட்டப்படும்.

இவ்வாறு மாதுசாமி கூறினார்.

Next Story