பெங்களூருவில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை கொல்ல சதி தேசதுரோக வழக்கில் 6 பேர் கைது எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்தவர்கள்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்றவரை கொல்ல முயன்ற வழக்கில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு,
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுவுக்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆதரவு ஆர்ப்பாட்டம்
அதே நேரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும் பா.ஜனதா கட்சியினர் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் ஆதரவு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் (டிசம்பர்) 22-ந் தேதி பெங்களூரு டவுன்ஹாலில் பல்வேறு அமைப்புகள் சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா எம்.பி.யான தேஜஸ்வி சூர்யாவும் கலந்து கொண்டு இருந்தார். அதுபோல, ஜே.பி.நகர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த வருண் (வயது 31) என்பவரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இருந்தார். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
பா.ஜனதா எம்.பி.யை கொல்ல முயற்சி
அப்போது கலாசிபாளையம் அருகே ஒசபடாவனே, கும்பாரகுந்தி மெயின் ரோட்டில் வரும்போது மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டரில் வந்த மர்மநபர்கள் வருணை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றனர். இதில், படுகாயம் அடைந்த வருண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுதொடர்பாக கலாசிபாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்த நிலையில், வருணை கொல்ல முயன்றதாக எஸ்.டி.பி.ஐ. அமைப்பை சேர்ந்த 6 பேரை கலாசி பாளையம் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பா.ஜனதாவின் இளம் எம்.பி.யான தேஜஸ்வி சூர்யா மற்றும் இந்து அமைப்பினரை கொல்ல முயன்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
6 பேர் கைது
பெங்களூரு டவுன்ஹாலில் கடந்த டிசம்பர் 22-ந் தேதி நடந்த குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்ற ஜே.பி.நகரை சேர்ந்த வருண் என்பவரை கலாசிபாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து சிலா் கொலை செய்ய முயற்சித்திருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ரமேஷ் தலைமையில் கலாசிபாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்த நிலையில், வருணை கொலை செய்ய முயன்றதாக ஆர்.டி.நகர் அருகே சாம்புராவை சேர்ந்த தையல் கடை நடத்தும் இர்பான் என்ற முகமது இர்பான் (33), சையத் அக்பர் (46), சனா என்ற சனாவுல்லா (28), லிங்கராஜபுரத்தை சேர்ந்த சையத் சித்திக் (30), கோவிந்தபுராவை சேர்ந்த அக்பர் பாட்ஷா (27), சிவாஜிநகரை சேர்ந்த சாதிக் (39) ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் சனா எலெக்ட்ரிக்கல் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
தலைவர்களை கொல்ல சதி
இவர்கள் 6 பேரும் எஸ்.டி.பி.ஐ. அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அந்த அமைப்பில் உறுப்பினராக இருந்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. டிசம்பர் 22-ந் தேதி டவுன்ஹாலில் நடந்த குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுவுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் முக்கிய தலைவர்களை கொலை செய்ய 6 பேரும் சதி திட்டம் தீட்டியுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி.யான தேஜஸ்வி சூர்யா மற்றும் சக்கரவர்த்தி சூழிபெலே மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்பட இந்து அமைப்புகளின் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது அங்கு திரண்டு இருந்தவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்களை வீசினால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடுவார்கள். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய தலைவர்களை கொலை செய்ய 6 பேரும் திட்டமிட்டு உள்ளனர். ஆனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கற்களை வீசி தாக்கியபோது யாரும் கலைந்து செல்லவில்லை.
போலீசாரின் பாதுகாப்பால்...
அதே நேரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டதால் முன் எச்சரிக்கையாக பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு டவுன்ஹால் உள்பட முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் போலீசாரின் பாதுகாப்பை மீறி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய தலைவர்களையோ, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களையோ கைதான 6 பேரால் கொலை செய்ய முடியவில்லை.
தாங்கள் திட்டமிட்டபடி யாரையும் கொலை செய்ய முடியாத காரணத்தால், வேறு வழியின்றி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வீட்டுக்கு சென்ற வருண் மீது ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயற்சித்து உள்ளனர். முதலில் வருணை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். உடனே வருண் இறந்து விட்டதாக நினைத்து அங்கிருந்து சென்றுள்ளனர். பின்னர் வருண் இறந்து விட்டதை உறுதிப்படுத்த 2 பேர் திரும்பி வந்து பார்த்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு கூடிய பொதுமக்கள் வருணை மீட்டு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்வதை பார்த்ததும் 2 பேரும் திரும்பி சென்றது தெரியவந்துள்ளது.
மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் திருட்டு
குறிப்பாக முக்கிய தலைவர்கள், இந்து அமைப்பினரை கொலை செய்ய திட்டமிட்டதுடன், போலீசாரிடம் சிக்காமல் இருப்பது குறித்து இர்பானும், அக்பர் பாட்ஷாவும் திட்டமிட்டு இருந்தனர். அதாவது முக்கிய தலைவர்களை கொலை செய்ய வந்த 6 பேரும் தங்களது செல்போனை வீட்டிலேயே ஆன் செய்து வைத்துவிட்டு வந்திருந்தனர். தங்களது முகத்தை யாரும் அடையாளம் கண்டு கொள்ள கூடாது என்பதற்காக ஹெல்மெட் அணிந்து 6 பேரும் டவுன்ஹாலுக்கு வந்திருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டரை திருடி, அவற்றின் பதிவு எண் மீது கருப்பு மை பூசி பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
மேலும் 2 ஜீன்ஸ் பேண்ட், 3 டி-ஷர்ட்டுகள் அணிந்திருந்தனர். ஏனெனில் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு ஒரு ஆடையையும், சம்பவம் நடக்கும் போது ஒரு ஆடையையும், சம்பவத்திற்கு பின்பு ஒரு ஆடையையும் அணிந்திருந்தனர். இவ்வாறு போலீசாரிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க திட்டமிட்டு 6 பேரும் செயல்பட்டது தெரியவந்துள்ளது. போலீசாரின் பலத்த பாதுகாப்பு காரணமாக பெங்களூருவில் பெரிய அளவில் நடைபெற இருந்த அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டுள்ளது.
தேசதுரோக வழக்கு
வருணை கொலை செய்ய முயன்ற பின்பு இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடிக்க துணை போலீஸ் கமிஷனர் ரமேஷ் தலைமையிலான போலீசார் பகல், இரவு பார்க்காமல் கடுமையாக உழைத்துள்ளனர். டவுன்ஹால், அதை சுற்றியுள்ள 700 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்திருந்தனர். மேலும் கைதானவர்கள் வருணை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்கள், மோட்டார் சைக்கிள்கள், ஹெல்மெட்டுகள், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டருக்கு பெட்ேரால் போட்டதற்கான ரசீது உள்ளிட்ட எல்லா ஆதாரங்களையும் போலீசார் திரட்டியுள்ளனர். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 6 பேரையும் கைது செய்த கலாசிபாளையம் போலீசாருக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
கைதான 6 பேர் மீதும் தேசதுரோக வழக்கு, சட்டப்பிரிவு 143, 147, 148, 149 மற்றும் 307 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவர்களை போலீஸ் காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பயப்பட வேண்டாம்
பெங்களூருவில் முக்கிய தலைவர்கள், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களை கொலை செய்ய திட்டமிட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. பெங்களூரு பாதுகாப்பான நகராகும். நகரில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு நகரில் பெரும்பாலான பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அதனால் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் யாரும் தப்பித்து விட முடியாது. பெங்களூருவில் வருகிற 19-ந் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டும், வருகிற 26-ந் தேதி குடியரசு தினவிழாவையொட்டியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பாஸ்கர்ராவ் கூறினார்.
பேட்டியின் போது மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல், மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
பெங்களூருவில் பா.ஜனதா எம்.பி. மற்றும் இந்து அமைப்பினரை கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story