புதுவை கடல் முகத்துவார பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு தலைகீழாக கவிழ்ந்தது அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
காணும் பொங்கலையொட்டி புதுவை முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு படகில் சென்றபோது கடல் முகத்துவாரப்பகுதியில் படகு தலைக்குப்புற கவிழ்ந்தது.
அரியாங்குப்பம்,
காணும் பொங்கலையொட்டி புதுவை முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு படகில் சென்றபோது கடல் முகத்துவாரப்பகுதியில் படகு தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
படகு சவாரி
புதுவை முருங்கப்பாக்கத்தில் சுற்றுலாத்துறையின் கீழ் கலை மற்றும் கைவினை கிராமம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு அனுமதியுடன் தனியார் நிறுவனம் சார்பில் அந்த பகுதியில் உள்ள அரியாங்குப்பம் ஆற்றில் படகு சவாரி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆற்றில் இருந்து அரிக்கன்மேடு, முகத்துவாரம், மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 5-க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் படகு சவாரி நடைபெற்று வருகிறது.
விடுமுறை நாட்கள், பண்டிகை தினங்களில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த படகுகளில் ஏறி சென்று சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வருகிறார்கள்.
தலைக்குப்புற கவிழ்ந்தது
காணும் பொங்கலை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் படகுகளில் உல்லாசமாக சவாரி செய்து மகிழ்ந்தனர். மாலை 4 மணி அளவில் ஒரு படகில் 10-க்கும் மேற்பட்டோர் சென்றனர். அந்த படகு அரியாங்குப்பம் ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரம் பகுதிக்கு சென்றது. பின்னர் அங்கிருந்து மீண்டும் கரைக்கு திரும்ப முயன்றபோது படகின் என்ஜின் திடீரென பழுதாகிவிட்டது. அதனால் படகு, கரையை நோக்கி பாதி திரும்பிய நிலையில் நின்றுவிட்டது. படகு இயக்கியவர்கள் என்ஜினை சரி செய்ய முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதன் காரணமாக படகில் இருந்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் படகு கரையை நோக்கி திரும்பிய நிலையில் இருந்ததாலும், கடலில் இருந்து கரையை நோக்கி காற்று பலமாக வீசியதாலும் காற்றின் வேகத்தில் படகு ஒரு நிலையில் நில்லாமல் தத்தளிக்க தொடங்கியது. திடீரென அந்த படகு ஒரு பக்கமாக சாயத் தொடங்கியது. அதனால் படகில் இருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
சில நிமிடங்களில் படகு முகத்துவாரப்பகுதியில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 2½ வயது சிறுமி உள்பட பயணிகள் அனைவரும் கடலுக்குள் விழுந்தனர். ஆனால் அந்த பகுதியில் மார்பளவுக்கு மட்டுமே ஆழம் இருந்ததால் அவர்கள் அனைவரும் கடலில் மூழ்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பின்னர் அவர்கள் கடலில் தட்டுத்தடுமாறி நடந்து ஆற்றின் கரைக்கு சென்று கரையேறினர். இந்த சம்பவத்தில் லேசான காயம் அடைந்த ரெயின்போ நகரை சேர்ந்த சுற்றுலா பயணி ஜானகிராமன் (வயது 39), அவருடைய மகள் நிகரிகா துர்கா (2½) ஆகியோர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். மேலும் ரமேஷ் (52), ராதிகா (49), ரேஷ்மா (16) ஆகியோர் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள் படகில் சவாரி சென்றபோது பயணிகளுக்கு போதுமான உயிர் பாதுகாப்பு கவசம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அரியாங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story