திருச்சி மத்திய சிறையில் அதிரடி சோதனை; 3 செல்போன், சிம்கார்டுகள், பேட்டரி பறிமுதல்


திருச்சி மத்திய சிறையில் அதிரடி சோதனை; 3 செல்போன், சிம்கார்டுகள், பேட்டரி பறிமுதல்
x
தினத்தந்தி 18 Jan 2020 3:30 AM IST (Updated: 18 Jan 2020 12:33 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மத்திய சிறையில் நடத்திய அதிரடி சோதனையில் 3 செல்போன், 2 சிம்கார்டுகள், பேட்டரி உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி, 

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் கைதிகளிடம் செல்போன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில் அவ்வப்போது மாநகர போலீசாருடன் இணைந்து சிறை காவலர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள். 

இந்தநிலையில் நேற்று சிறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ஜெயிலர் சதீஷ்குமார் தலைமையில் சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 12 பேர் அடங்கிய குழுவினர் நேற்று காலை சிறையில் அதிரடி சோதனை நடத்தினார்கள். கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பிளாக்கிற்கும் சென்று அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.

அப்போது சிறைக்குள் முக்கிய வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் அடைக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு தொகுதியில் 3 செல்போன்கள், 2 சிம்கார்டுகள், பேட்டரி மற்றும் சார்ஜர் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றை சிறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். உயர்பாதுகாப்பு தொகுதியில் செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் வந்தது எப்படி? என விசாரணை நடத்தினார்கள். 

தொடர்ந்து இது குறித்து ஜெயிலர் சதீஷ்குமார் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி சிறையில் நடத்திய சோதனையில் 3 செல்போன்கள், 2 சிம்கார்டுகள் மற்றும் பேட்டரி சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story