காணும் பொங்கலையொட்டி 8 சுற்றுலா தலங்களுக்கு ரூ.10-க்கு பஸ் பயணம்


காணும் பொங்கலையொட்டி 8 சுற்றுலா தலங்களுக்கு ரூ.10-க்கு பஸ் பயணம்
x
தினத்தந்தி 18 Jan 2020 3:45 AM IST (Updated: 18 Jan 2020 12:54 AM IST)
t-max-icont-min-icon

காணும் பொங்கலையொட்டி, 8 சுற்றுலா தலங்களுக்கு செல்ல ரூ.10-க்கு பஸ்சில் பயணம் செய்தனர். இதில் முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்காவில் குடும்பத்துடன் பொதுமக்கள் குவிந்தனர்.

திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் கடந்த 15-ந் தேதி பொங்கல் திருநாளை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடினார்கள். இதையொட்டி, பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாட்டு பொங்கலையொட்டி திருவெறும்பூர் அருகே பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுதை கழித்தனர். பலர் வீட்டில் சாப்பாடு தயார் செய்து, சுற்றுலா தலங்களுக்கு கொண்டு சென்று சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

மேலும் காணும் பொங்கலை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடும் வகையில், தமிழக சுற்றுலாத்துறை சார்பில் நேற்று ஒருநாள் மட்டும் ரூ.10 கட்டணத்தில் 2 சிறப்பு சுற்றுலா பஸ்கள் இயக்கப்பட்டன. அவை திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில், மலைக்கோட்டை, முக்கொம்பு, ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா, சமயபுரம், திருவானைக்காவல், அண்ணா அறிவியல் மையம் உள்பட 8 சுற்றுலா தலங்களுக்கு இயக்கப்பட்டன. இதில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நபருக்கு ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

சோதனை ஓட்டமாக நடந்த அரசின் இந்த முயற்சிக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. குடும்பத்துடன் இந்த சுற்றுலா பஸ்சில் சென்று பொதுமக்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலத்தில் நேற்று காணும் பொங்கலையொட்டி, பொதுமக்கள் குடும்பத்துடன் வந்திருந்து பொழுதை கழித்தனர். முக்கொம்பு மேலணையில் தான் காவிரி ஆறு பிரிந்து கல்லணை நோக்கியும், கொள்ளிடம் ஆறு தனியாக பிரிந்து உபரிநீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் ஆனந்தமாக குளித்தனர். காவிரி கரையோரம் ஆழமான பகுதிக்கு பொதுமக்கள் சென்று விடாதபடி, அங்கு ஜீயபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிறுவர், சிறுமிகள் உற்சாகமாக அங்குள்ள பூங்காவில் ஊஞ்சல் ஆடியும், சறுக்கு விளையாண்டும் பொழுதை களித்தனர். அதிக அளவில் காவிரி ஆற்றில் தண்ணீர் செல்வதால் அங்கு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். வீட்டில் இருந்து சமைத்து கொண்டு சென்ற உணவை உறவினர் மற்றும் உற்றாருடன் பகிர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். சிலர் காவிரி ஆற்றங்கரையில் சமைத்தும் சாப்பிட்டனர்.

ஸ்ரீரங்கத்தில் மேலூர் அருகே வண்ணத்துப்பூச்சி பூங்காவில் காணும் பொங்கலையொட்டி, பொதுமக்கள் அதிக அளவில் கூடினர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காவில் சிறுவர், சிறுமிகள் பொழுதை கழிக்கும் வகையில் ஊஞ்சல், சறுக்கு ஏணி, ராட்டினங்கள் உள்ளதால் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

வண்ணத்துப்பூச்சி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வண்ணத்துப்பூச்சி மாதிரி உருவங்கள் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்தது. நீரூற்றுகள், நீர்தாவரங்கள் கொண்ட குட்டையின் மீதுள்ள மரப்பலகையில் நடந்து சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மேலும் காணும் பொங்கலையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல், மலைக்கோட்டை தாயுமானவர் கோவில், சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பொதுமக்கள் அதிக அளவில் சென்று வழிபட்டனர்.

மலைக்கோட்டை பகுதியில் உச்சி பிள்ளையார் கோவில் அருகே பாறையின் மீது அமர்ந்து சுற்றுலா பயணிகள் செல்பி போட்டோ எடுத்து கொண்டனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் மலைக்கோட்டை கோவிலுக்கு வந்திருந்தனர்.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம், காவிரி படித்துறை, துறையூர் பச்சமலை, திருவளர்ச்சோலை உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்கள் அதிக அளவில் கூடி இருந்தனர். தஞ்சை மாவட்டம் கல்லணை திருச்சிக்கு அருகில் இருப்பதால், நேற்று திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் குடும்பத்துடன் கல்லணைக்கு சென்றனர். மேலும் இளைஞர்கள் பலர் மோட்டார் சைக்கிளில் குழுவாக அங்கு சென்று பொழுதை கழித்தனர்.

Next Story