கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் சார்பில் ரூ.11 கோடி நலத்திட்ட உதவி - கலெக்டர் தகவல்


கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் சார்பில் ரூ.11 கோடி நலத்திட்ட உதவி - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 Jan 2020 10:30 PM GMT (Updated: 17 Jan 2020 8:18 PM GMT)

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.11 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து கலெக்டர் கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர், 

தமிழக அரசு தொழிலாளர் நலத்துறையின் கீழ் மாவட்டந்தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு, உடலுழைப்பு தொழிலாளர்களான கட்டுமானம், பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில், தையல், சலவை, பொற்கொல்லர், மண்பாண்டம், விசைத்தறி, சமையல், தெரு வியாபாரம், ஆட்டோ உட்பட 113-க்கும் மேற்பட்ட தொழில்கள் செய்து வரும் தொழிலாளர்கள் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் நலவாரியம் மற்றும் இதர 16 நல வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்படுகின்றனர்.

உறுப்பினர்களாகச் சேரும் தொழிலாளர்களுக்கு வாரியங்கள் மூலம் கல்வி உதவித்தொகையாக ரூ.1000 முதல் ரூ.8000 வரையும், திருமண உதவித்தொகையாக ரூ.5000-மும், மகப்பேறு உதவித்தொகையாக ரூ.6000-மும், கண் கண்ணாடி உதவித்தொகையாக ரூ.500-மும், ஓய்வூதியம் மாதந்தோரும் ரூ.1000 வீதமும் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கு ரூ.25,000 வீதமும் மற்றும் விபத்து மரணத்திற்கு ரூ1 லட்சத்து 2 ஆயிரம் முதல் அதிக பட்சமாக ரூ.5 லட்சம் வரையும் மற்றும் விபத்து ஊனத்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டமாக திகழக்கூடிய விருதுநகர் மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1 கோடியே50 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையும், 34 பேருக்கு ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான திருமண உதவித்தொகையும் வழங்கப்பட்டது. அந்த ஆண்டு மொத்தம் 8548 பேருக்கு ரூ.2 கோடியே 93 லட்சத்து 22 ஆயிரத்து 200 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. இதேபோல 2018-ம் ஆண்டு அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.2 கோடியே ரூ.7 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. மொத்தம் 12,295 பேருக்கு ரூ.3 கோடியே 65 லட்சத்து 6 ஆயிரத்து 700 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

2019-ம் ஆண்டு மொத்தம் 8,838 பேருக்கு ரூ.4 கோடியே 51 லட்சத்து 67 ஆயிரத்து 450 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் 29,681 பேருக்கு ரூ.11 கோடியே 9 லட்சத்து 96 ஆயிரத்து 350 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

Next Story