சமுதாய தலைவர்களை அவதூறாக பேசி ‘டிக்-டாக்’ வீடியோ வெளியிட்ட 3 வாலிபர்கள் கைது - மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
சங்கரன்கோவில் அருகே சமுதாய தலைவர்களை அவதூறாக பேசி ‘டிக்-டாக்‘ வீடியோ வெளியிட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த சில வாலிபர்கள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமுதாய தலைவர்களை அவதூறாக பேசி ‘டிக்-டாக்‘ வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இந்த ‘டிக்-டாக்‘ வீடியோ சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதாகவும், எனவே, அந்த வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், பாட்டாத்தூரை சேர்ந்த மணிகண்டன் மகன் விஜயகுமார் (வயது 20) மற்றும் 17 வயதுடைய 2 வாலிபர்கள் உள்பட 5 பேர் இந்த ‘டிக்-டாக்‘ வீடியோவை வெளியிட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் உடனடியாக விஜயகுமார் உள்பட 3 வாலிபர்களை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story