மீஞ்சூர் அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி
மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியானார். சாலையை சீரமைக்க முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
மீஞ்சூர்,
மீஞ்சூர் அருகே நந்தியம்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் அருண்குமார்மேத்தா (வயது 30). ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவரான இவர் வடசென்னை அனல் மின் நிலையத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு பூஜாதேவி (25) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். பொங்கல் பண்டிகையின் காரணமாக விடுமுறை என்பதால் நேற்றுமுன்தினம் சென்னை கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் சென்றனர். நேற்றுமுன்தினம் இரவில் தன்னுடைய குடியிருப்புக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பினார். அப்போது வடசென்னை அனல்மின் நிலைய சாலை வழியாக வல்லூர் கிராமம் அருகே வரும்போது சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இறங்கியது. இதில் தவறி விழுந்த பூஜாதேவி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த பொதுமக்கள் ஒன்று கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட இடத்திற்கு மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் வந்து பூஜாதேவியின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் வடசென்னை அனல்மின் நிலைய சாலை மிகவும் பழுதாகி மேடு பள்ளங்களாக உள்ளதாக தமிழ்நாடு நெடுஞ்சாலை மேம்பாட்டுக் கழகத்துக்கு புகார் செய்தனர்.
அதன்பேரில் நேற்று காலை மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் ரவி தலைமையில் தமிழ்நாடு நெடுஞ்சாலை மேம்பாட்டு கழகத்தின் முதுநிலை மேலாளர் ரங்கராஜன், மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரமேஷ்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வடசென்னை அனல்மின் நிலைய சாலை மேடும் பள்ளமாக உள்ளதை சீரமைக்க வேண்டும், சாலையை சுத்தம் செய்ய வேண்டும், சாலையில் தூசி பறக்காமல் இருக்க தண்ணீர் தெளிக்க வேண்டும், மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் நிலக்கரி கிடங்கில் இருந்து அரசு அனுமதித்த அளவில் நிலக்கரியை லாரியில் இரவு நேரங்களில் மட்டும் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும், அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளை அதிக எடையுடன் எடுத்து செல்வதை தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்ற அதிகாரி நடவடிக்கை எடுப்பதாகவும் வரும் திங்கட்கிழமை முதல் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story