காணும் பொங்கலையொட்டி பூண்டி, பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
காணும் பொங்கலையொட்டி பூண்டி மற்றும் பழவேற்காடு பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரி, பரந்து விரிந்த பூங்கா, தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தின் அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன. இந்த இடங்களை காண சுற்றுலா பயணிகள் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் வந்து செல்வது வழக்கம். மேலும் மாட்டு பொங்கல், காணும் பொங்கலன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
நேற்று காணும் பொங்கலையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பூண்டி ஏரி பகுதியில் குவிந்தனர்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டன்படி தற்போது ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பூண்டி ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாத வண்ணம் ஏரியில் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனின் உத்தரவுப்படி ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி ஆகியோரின் மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏரியில் இறங்கி குளிக்கக்கூடாது என்று போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் தொடர்ந்து எச்சரிக்கை செய்து கொண்டிருந்தனர். ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டு வந்ததால் பூண்டியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதே போன்று பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு கடற்கரையில் 50 ஆயிரத்திற்கும் மேலான சுற்றுலா பயணிகள் அந்த பகுதியில் குவிந்தனர். 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்னதாகவே பொன்னேரி பழவேற்காடு சாலையில் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சுற்றுலா பயணிகள் பலரும் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story