பேட்டையில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ற போது கேட் திறந்து கிடந்ததால் பரபரப்பு
பேட்டையில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ற போது ரெயில்வே கேட் திறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை-செங்கோட்டை ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே பேட்டை ரெயில் நிலையத்தை அடுத்து ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த தண்டவாளத்தில் பகல் நேரத்தில் நெல்லை-செங்கோட்டை இடையே பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படுகிறது. இரவில் நெல்லை-பாலக்காடு இடையிலான பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 10.45 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து பாலக்காட்டுக்கு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் பேட்டை ரெயில் நிலையத்தை கடந்து சென்ற போது அங்குள்ள கேட் மூடப்படாமல் திறந்தே கிடந்தது. அப்போது ரெயில் வருவதை அறிந்த அந்த வழியாக ரோட்டில் சென்றவர்கள் கண்டனர். அவர்கள் உஷார் அடைந்து தண்டவாளத்தின் இருபுறமும் நின்று வாகனங்கள் உள்ளே நுழைந்து விடாதபடி தடுப்பு அரண் அமைத்தனர். ரெயில் சென்ற பிறகு வாகனங்கள் கடந்து செல்ல வழிவிட்டனர். இந்த சம்பவத்தால் பேட்டை ரெயில்வே கேட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, “பேட்டை ரெயில்வே கேட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் டிரைவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த ரெயில் கேட் அருகில் சென்ற போது யாரும் கடந்து செல்ல விடாமல் அறிவிப்பு செய்யப்பட்டு, கேட் கீப்பர் பச்சை விளக்கை காட்டினார். அதன்படி ரெயில் கடந்து சென்றது” என்றனர்.
Related Tags :
Next Story