2 பேர் பலி-36 பேர் காயம்: அலங்காநல்லூரில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு - சிறந்த வீரர்-காளைக்கு கார்கள் பரிசு


2 பேர் பலி-36 பேர் காயம்: அலங்காநல்லூரில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு - சிறந்த வீரர்-காளைக்கு கார்கள் பரிசு
x
தினத்தந்தி 18 Jan 2020 12:00 AM GMT (Updated: 17 Jan 2020 9:19 PM GMT)

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். மாடு முட்டி 36 பேர் காயம் அடைந்தனர். சிறந்த வீரர்-காளைக்கு கார்கள் பரிசு வழங்கப்பட்டது.

அலங்காநல்லூர்,

பொங்கல் பண்டிகையொட்டி மதுரை அவனியாபுரத்தில் 15-ந் தேதியும், பாலமேட்டில் நேற்று முன்தினமும் ஜல்லிக்கட்டு நடந்தது. அதன் தொடர்ச்சியாக உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது.

இந்த ஜல்லிக்கட்டினை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் குவிந்து இருந்தனர். அதே போல் சுற்றுலாத்துறை மூலம் வெளிநாட்டு பார்வையாளர்களும் அழைத்து வரப்பட்டனர்.

அதிகாலை 5 மணிக்கே பார்வையாளர்கள் கேலரிகள் நிரம்பி வழிந்தன. களம் காண இருந்த காளைகளும், மாடுபிடி வீரர்களும் பரிசோதனைக்கு பின்பே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

காலை 7.40 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின. மதுரை கலெக்டர் வினய் உறுதிமொழி வாசிக்க, அதனை வீரர்கள் திரும்ப வாசித்து ஏற்றுக்கொண்டனர். அதன்பின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், விழா ஏற்பாடுகள் குழு தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான மாணிக்கம் ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியினை தொடங்கி வைத்தனர்.

முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின் டோக்கன் வரிசைப்படி ஜல்லிக்கட்டு காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. ஒரு மணி நேர சுற்று என்ற அடிப்படையில் வீரர்களும் களம் இறங்கினர்.

ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக நகர்ந்தது. சில காளைகள் களத்தில் நின்று விளையாடின. அதே வேளையில் அடங்க மறுத்த காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்கியது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கி திறமையை நிரூபித்த வீரர்களுக்கும் தங்க காசு, அண்டா, சைக்கிள்கள், நாற்காலி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா, இலங்கையை சேர்ந்த தொண்டைமான் ஆகியோரின் காளைகள் களம் கண்ட போது, அதனை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு ஏராளமான பரிசு பொருட்கள் அறிவிக்கப்பட்டன. எனவே அந்த காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் இடையே பலத்த போட்டி நிலவியது. ஆனால் இந்த காளைகள் களத்தில் வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. அந்த சமயத்தில் பார்வையாளர்களின் கரகோஷமும், கைத்தட்டலும் விண்ணை பிளந்தது.

போட்டியின் ஒவ்வொரு அசைவையும் போலீசாரும், அதிகாரிகளும் கண்காணித்தனர். ஒரு மாட்டினை இரண்டு பேர் அடக்க முற்பட்டால் அது பிடிபடாத மாடு என்று உடனடியாக அறிவிக்கப்பட்டது. விதிகள் குறித்து வீரர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை செய்யப்பட்டு வந்தது. சுப்ரீம் கோர்ட்டின் வழிமுறைகள் குறித்தும் தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டன.

மாலை 4.30 மணிக்கு ஜல்லிக்கட்டு முடிக்க வேண்டும். ஆனால் நிறைய காளைகள் அவிழ்க்க வேண்டி இருந்ததால் 40 நிமிட நேரம் நீட்டிக்கப்பட்டு மாலை 5.10 மணி வரை ஜல்லிக்கட்டு நடந்தது.

இந்த போட்டியில் பங்கேற்க மொத்தம் 877 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து இருந்தனர். அதில் 10 பேர் நிராகரிக்கப்பட்டனர். 179 பேர் வரவில்லை. 688 வீரர்கள் பங்கேற்றனர். அதே போல் மொத்தம் 750 காளைகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 5 நிராகரிக்கப்பட்டு, 745 காளைகள் களம் கண்டன. சுமார் 100 அடி தூரத்தில் வாடிவாசல் எல்கை கொடி கட்டப்பட்டிருந்தது. வேகமாக வரும் காளைகள் சறுக்கி விழுந்தாலும், மாடுபிடி வீரர்கள் கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாத வகையில் வாடிவாசல் முன்பாக உள்ள மைதானத்தில் தென்னை நார்களில் சுமார் 150 அடி தூரத்திற்கு பரப்பி வைக்கப்பட்டிருந்தன.

இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சோழவந்தானை சேர்ந்த என்ஜினீயர் ஸ்ரீதர், செக்கானூரணியை சேர்ந்த செல்லப்பாண்டி ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர் என்ற முதல் பரிசு பெற்ற பிரபாகரன் உள்பட 18 வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் 10 பேர், 8 பார்வையாளர்கள் என மொத்தம் 36 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு உடனடியாக முதல் உதவி அளிக்கப்பட்டு அலங்காநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை நீதிபதி மாணிக்கம், கலெக்டர் வினய் ஆகியோர் பார்வையிட்டு, உரிய சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக குலமங்கலத்தை சேர்ந்த மாரநாடு என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. 2-வது பரிசை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதாவின் காளையும், 3-வது பரிசை மதுரை ஆயத்தான்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் காளையும் வென்றன.

அதே போல் 16 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரை சேர்ந்த ரஞ்சித்குமாருக்கு சிறந்த மாடுபிடி வீரர் என்ற முதல் பரிசு வழங்கப்பட்டது. 14 காளைகளை அடக்கிய அழகர்கோவில் கார்த்திக் 2-வது பரிசையும், 13 காளைகளை அடக்கிய அரிட்டாப்பட்டி கணேசன் 3-வது பரிசையும் பெற்றனர். முதல் பரிசு பெற்ற வீரர் ரஞ்சித்குமார் மற்றும் முதல் இடம் பிடித்த காளையின் உரிமையாளர் குலமங்கலம் மாரநாடு ஆகியோருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சார்பில் கார்கள் பரிசு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியினை அமைச்சர் விஜயபாஸ்கர், தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் குமார், எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், சரவணன், பெரியபுள்ளான், தி.மு.க. எம்.எல்.ஏ. மூர்த்தி, பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்தி ராஜூ, ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ், தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் ஆகியோர் கண்டு களித்தனர். விழாவையொட்டி அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதியில் குடிதண்ணீர், பொது சுகாதார ஏற்பாடுகளை பேரூராட்சி மாவட்ட உதவி இயக்குனர் சேதுராமன் மேற்பார்வையில் செயல் அலுவலர்கள் தனபால், சிவகுமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் செய்திருந்தனர்.

Next Story