காணும் பொங்கலையொட்டி ராமேசுவரம், தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


காணும் பொங்கலையொட்டி ராமேசுவரம், தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 18 Jan 2020 3:45 AM IST (Updated: 18 Jan 2020 2:49 AM IST)
t-max-icont-min-icon

காணும் பொங்கலையொட்டி ராமேசுவரம் கோவில் மற்றும் தனுஷ்கோடியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ராமேசுவரம்,

காணும் பொங்கலையொட்டி ராமேசுவரம் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அக்னிதீர்த்த கடல் மற்றும் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராட பக்தர்கள் குவிந்திருந்தனர். இதே போல் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் முடித்த பல மாநிலங்களை சேர்ந்த ஏராளமான அய்யப்ப பக்தர்களும் ராமேசுவரம் கோவிலில் குவிந்திருந்தனர்.

அதுபோல் கோவிலில் சாமி தரிசனம் செய்ய, சிறப்பு தரிசன பாதை மற்றும் இலவச தரிசன பாதைகளிலும் பக்தர்கள் முதல் பிரகாரம் மற்றும் 3-ம் பிரகாரத்திலும் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர்.

இதேபோல் தனுஷ்கோடி பகுதியிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. அரிச்சல்முனை கடற் கரை சாலையில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாகவும் சுற்றுலா வாகனங்களுமாகத்தான் இருந்தன. கடலின் நடுவே உள்ள சாலை மற்றும் இரண்டு கடல்கள் சேருமிடத்தையும் சுற்றுலா பயணிகள்ஆர்வமாக பார்த்து ரசித்தனர். 

சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்காமல் இருக்கும் வகையில் கடலோர போலீசார் அரிச்சல்முனை கடற் கரை பகுதியில் தீவிர ரோந்து வந்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் பாம்பன் ரோடு பாலத்திலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

Next Story