52 குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடையவர்: பரோலில் வெளிவந்து தலைமறைவான மும்பை பயங்கரவாதி உத்தரபிரதேசத்தில் போலீசார் மடக்கினர்
பரோலில் வெளிவந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு ஆயுள் தண்டனை கைதி ஜலீஸ் அன்சாரி திடீரென மாயமானார்.
மும்பை,
பரோலில் வெளிவந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு ஆயுள் தண்டனை கைதி ஜலீஸ் அன்சாரி திடீரென மாயமானார். தலைமறைவான மறுநாளே அவர் உத்தரபிரதேசத்தில் போலீசாரிடம் சிக்கினார்.
மும்பை குண்டுவெடிப்பு கைதி
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் ஜலீஸ் அன்சாரி (வயது68). தென்மும்பை அக்ரிபாடா மோமின்புராவை சேர்ந்த இவருக்கு, நாடு முழுவதும் நடந்த 52 குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்திய முஜாஹிதீன், சிமி போன்ற பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்து அவர்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பது மற்றும் அவற்றை கையாளுவது குறித்து பயிற்சி அளித்து வந்தவர். இவர் எம்.பி.பி.எஸ். படித்து உள்ளார். போலீசாரால் ‘டாக்டர் பாம்' என அறியப்படும் ஜலீஸ் அன்சாரி பல வழக்குகளில் தண்டனை பெற்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், ஜலீஸ் அன்சாரி 21 நாள் பரோலில் மும்பை வந்தார்.
திடீர் மாயம்
பரோல் நாட்களில் அவர் மும்பை அக்ரிபாடா போலீஸ் நிலையத்தில் காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12 மணிக்குள் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. இதன்படி தினசரி போலீஸ் நிலையத்திற்கு சென்று ஜலீஸ் அன்சாரி கையெழுத்து போட்டு வந்தார். நேற்று அவரது பரோல் காலம் முடிய இருந்த நிலையில், நேற்றுமுன்தினம் அவர் போலீஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்து போடவில்லை.
இந்தநிலையில், அன்று மதியம் அவரது மகன் ஜாயித் அன்சாரி திடீரென அக்ரிபாடா போலீஸ் நிலையத்திற்கு வந்து தனது தந்தை காணாமல் போய் விட்டதாக புகார் அளித்தார்.
அதிகாலை தொழுகைக்கு செல்வதாக கூறிச்சென்றதாகவும், அதன்பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை எனவும் போலீசாரிடம் தெரிவித்தார்.
சிக்கினார்
இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மகன் ஜாயித் அன்சாரி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவரும், வெடிகுண்டுகள் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவருமான பயங்கரவாதி ஒருவர் திடீர் தலைமறைவானது பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை குற்றப்பிரிவு போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்புபடை போலீசார் அவரை தீவிரமாக தேடிவந்தனர். மேலும் பல்வேறு மாநில போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். இந்தநிலையில் ஜலீஸ் அன்சாரி நேற்று உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story