பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்


பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 18 Jan 2020 4:00 AM IST (Updated: 18 Jan 2020 3:29 AM IST)
t-max-icont-min-icon

பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

திருப்பூர், 

திராவிடர் விடுதலை கழகத்தின் மாநில பொருளாளர் துரைசாமி தலைமையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் வந்தனர். பின்னர் அவர்கள் ஒரு மனுவை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சென்னையில் கடந்த 14-ந்தேதி நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1971-ம் ஆண்டு சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டையொட்டி நடந்த பேரணியில் ராமன், சீதை ஆகியோரின் உருவங்களை எடுத்து சென்றது தொடர்பாக ஒரு அப்பட்டமான பொய்யை பேசியுள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலை பரப்பி அதன் வழியாக தமிழகத்தில் பெரியார் மீது மக்கள் கொண்டிருக்கிற நல்லெண்ணத்தை சிதைக்க வேண்டும் என்ற தீய உள்நோக்கத்தோடும், தங்கள் எஜமானர்களை மகிழ செய்ய வேண்டும் என்றும் ரஜினிகாந்த் பேசியதாகவே நாங்கள் நம்புகிறோம்.பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியை பரப்பி பொது அமைதியை குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 153 அ மற்றும் 505 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த மனு ஏற்கப்பட்டதற்கான மனு ஏற்பு சான்றிதழும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகத்தினர் வலியுறுத்தினார்கள். இதில் திருப்பூர் மாவட்ட தலைவர் முகில்ராசு, இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், மாவட்ட அமைப்பாளர் அகிலன், மாநகர தலைவர் தனபால், மாநகர செயலாளர் மாதவன், மாநகர அமைப்பாளர் முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து மனு ஏற்பு சான்றிதழை போலீசார் அவர்களிடம் வழங்கினார்கள்.

கோவை, திருச்செங்கோடு

இதே போல் பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலைக்கழக நகர தலைவர் நேருதாஸ் தலைமையிலும், திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழக அமைப்பாளர் தனலட்சுமி தலைமையிலும் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.


Next Story