ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தபோது இளம்பெண்ணின் தலைமுடியை வெட்டிய வாலிபர்
ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தபோது இளம்பெண்ணின் தலைமுடியை வெட்டிய வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பூந்தமல்லி,
சென்னை நெற்குன்றத்தில் இருந்து அமைந்தகரை நோக்கி வந்த ஷேர் ஆட்டோவில் 23 வயது இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். அவர் அமர்ந்து இருந்த இருக்கைக்கு பின்புறம் உள்ள சீட்டில் 2 வாலிபர்கள் அமர்ந்து இருந்தனர்.
என்.எஸ்.கே. நகர் அருகே வந்தபோது இளம்பெண், தனது தலைமுடியை கத்திரிகோலால் யாரோ வெட்டுவதுபோல் உணர்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். உடனடியாக ஆட்டோவை டிரைவர் நிறுத்தினார்.
அப்போது அந்த இளம்பெண் தனது தலைமுடி வெட்டப்பட்டு இருப்பதை காட்டி கதறினார். இதனைகண்ட ஆட்டோ டிரைவரும், சக பயணிகளும் இளம்பெண்ணின் பின்னால் சந்தேகப்படும்படியாக அமர்ந்து இருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களிடம் சோதனையிட்டனர்.
அப்போது ஒரு வாலிபரின் பேண்ட் பையில் இளம்பெண்ணின் வெட்டப்பட்ட தலைமுடி சுருட்டி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே 2 வாலிபர்களும் தப்பி ஓடமுயன்றனர். அவர்களை சக பயணிகள் மடக்கிப்பிடித்து அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட வாலிபரில் ஒருவர் வக்கீல் ஒருவரிடம் கிளார்க்காக வேலை பார்த்து வருவது தெரிந்தது. இளம்பெண்ணின் தலைமுடியை எந்தவித காரணமும் இன்றி வெட்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.
குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதத்தில் பில்லி சூனியத்துக்கு பெண்ணின் தலைமுடி வெட்டப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆனால் பாதிக்கப்பட்ட பெண், இதுபற்றி புகார் கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார். எனவே போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இளம்பெண்ணின் தலை முடியை வெட்டிய வாலிபரின் பெற்றோரை வரவழைத்து அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story