ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் 2-வது தேஜஸ் ரெயில் சேவை தொடக்கம் மும்பை- ஆமதாபாத் இடையே இயக்கப்படுகிறது


ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் 2-வது தேஜஸ் ரெயில் சேவை தொடக்கம் மும்பை- ஆமதாபாத் இடையே இயக்கப்படுகிறது
x
தினத்தந்தி 18 Jan 2020 5:00 AM IST (Updated: 18 Jan 2020 4:03 AM IST)
t-max-icont-min-icon

ஐ.ஆர்.சி.டி.சி. இயக்கும் 2-வது அதிவிரைவு தேஜஸ் ரெயில் சேவை மும்பை- ஆமதாபாத் இடையே தொடங்கி வைக்கப்பட்டது.

மும்பை, 

ஐ.ஆர்.சி.டி.சி. இயக்கும் 2-வது அதிவிரைவு தேஜஸ் ரெயில் சேவை மும்பை- ஆமதாபாத் இடையே தொடங்கி வைக்கப்பட்டது.

தேஜஸ் ரெயில் சேவை

இந்தியன் ரெயில்வேயின் துணை நிறுவனமான ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ( ஐ.ஆர்.சி.டி.சி.) இயக்கும் முதலாவது அதிவிரைவு தேஜஸ் ரெயில் டெல்லி-லக்னோ இடையே கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி. இயக்கும் 2-வது தேஜஸ் ரெயில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்- மும்பை இடையே நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. ஆமதாபாத்தில் நடந்த விழாவில் குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி கொடி அசைத்து தேஜஸ் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

வாரத்தில் 6 நாட்கள்

ஆமதாபாத் - மும்பை இடையிலான தேஜஸ் ரெயில் தனது வணிக ரீதியிலான பயணத்தை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது. இந்த ரெயில் வியாழக்கிழமை தவிர்த்து வாரத்தில் மற்ற 6 நாட்கள் இயக்கப்படும்.

ஆமதாபாத்தில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்படும் தேஜஸ் ரெயில் மதியம் 1.10 மணிக்கு மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும். மறுமார்க்கத்தில் மும்பை சென்டிரலில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு இரவு 9.55 மணிக்கு ஆமதாபாத்தை சென்றடையும். இருமார்க்கத்திலும் இந்த ரெயில் நாடியாட், வதோதரா, பாருச், சூரத், வாபி, போரிவிலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

குளு குளு வசதி

இந்த ரெயில் முற்றிலும் குளு குளு வசதியுடன், பல்வேறு உயர்தர வசதிகளை கொண்டது. 1 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

தேஜஸ் ரெயில் தொடக்க விழாவில் ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரால் டெல்லியில் இருந்து ஆமதாபாத் வர இயலவில்லை என தெரிவிக்கப்பட்டது.

ஊழியர்கள் போராட்டம்

இந்த நிலையில், தேஜஸ் ரெயில்களை ஐ.ஆர்.சி.டி.சி. இயக்குவதற்கு ரெயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இது ரெயில்வேயை தனியார் மயமாக்கும் நடவடிக்கை என குற்றம் சாட்டின.

தேஜஸ் ரெயில் இயக்கத்தை கண்டித்து காலாப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியில்லாமல் இந்த போராட்டம் நடந்ததாக போலீசார் 30 பேரை கைது செய்தனர்.

Next Story