6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ டிரைவர் கைது - உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ டிரைவரையும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியான பள்ளி ஆசிரியையும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஆவடி,
ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் (வயது 33). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி விஜயலட்சுமி (32). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவர், மாலை நேரத்தில் தனது வீட்டில் அப்பகுதியைச்சேர்ந்த சிறுவர், சிறுமிகளுக்கு டியூசன் எடுத்து வந்தார். இவரது வீட்டுக்கு டியூஷன் படிக்கச்சென்ற 6 வயது சிறுமிக்கு நரேஷ், பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் சிறுமி கதறி அழுதாள்.
இதைப்பார்த்த சிறுமியின் சகோதரர், இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினார். அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதை அறிந்ததும் நரேஷ், தனது மனைவியுடன் தலைமறைவானார்.
இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் கணவன்-மனைவி இருவரும் பூந்தமல்லியில் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிந்தது. அங்குசென்றபோலீ சார் இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நரேஷ் மற்றும் இச்செயலை மறைத்து அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவியான பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி இருவர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் ஆவடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கைதான கணவன்- மனைவி இருவரையும் நேற்று இரவு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story