திருவொற்றியூரில் பரிதாபம்: வெந்நீர் வாளிக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி


திருவொற்றியூரில் பரிதாபம்: வெந்நீர் வாளிக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 18 Jan 2020 5:00 AM IST (Updated: 18 Jan 2020 4:51 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் வெந்நீர் வைத்து இருந்த வாளிக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் சண்முகபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், அதே பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜனனி. இவர்களது 2-வது மகள் சிவானிஸ்ரீ (வயது 2).

கடந்த 7-ந் தேதி ஜனனி, வீட்டில் குழந்தையை குளிக்கவைப்பதற்காக வாளியில் வெந்நீர் சுடவைத்து, அதை வராண்டாவில் வைத்து இருந்தார்.

அப்போது அங்கு விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை சிவானிஸ்ரீ, எதிர்பாராதவிதமாக வெந்நீர் வைத்து இருந்த வாளியில் தவறி விழுந்துவிட்டாள். இதில் அவள் மீது வெந்நீர் கொட்டியதால் உடல் வெந்து பலத்த காயம் அடைந்தாள்.

வலியால் அலறி துடித்த குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஜனனி, படுகாயம் அடைந்த குழந்தையை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு குழந்தை சிவானிஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துவிட்டாள்.

தங்கள் குழந்தையின் உடலை பார்த்து மணிகண்டன், ஜனனி இருவரும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுபற்றி சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story