வில்லியனூர், மங்கலம், காரைக்காலில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.வினர் மரியாதை


வில்லியனூர், மங்கலம், காரைக்காலில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.வினர் மரியாதை
x
தினத்தந்தி 18 Jan 2020 5:00 AM IST (Updated: 18 Jan 2020 5:00 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர், மங்கலம், காரைக்கால் பகுதியில் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி, 

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா புதுவை மாநிலத்தில் கொண்டாடப்பட்டது. வில்லியனூரில் நடந்த விழாவில் அ.தி.மு.க. முன்னாள் மாநில செயலாளர் க.நடராஜன் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் மாடவீதிகள் வழியாக ஊர்வலமாக புதுச்சேரி - விழுப்புரம் சாலைக்கு சென்றனர்.

பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் நிர்வாகிகள் வில்லியனூர் ராமு, ரவி, தேவதாஸ், ராமலிங்கம், சுந்தரமூர்த்தி, அப்பாவு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மங்கலம் தொகுதி உறுவையாறு கிராமத்தில் நடந்த விழாவில், எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு அ.தி.மு.க. தொகுதி செயலாளர் கலியபெருமாள் மலர் தூவி மரியாதை செலுத்தி னார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் நிர்வாகிகள் கண்ணப்பன், அப்பாவு, துரைக்கண்ணு, லோகு, லட்சுமணன், சபரிநாதன், ராஜேந்திரன், இளையபெருமாள், காசி, துலுக்கானம், சுகானந்தம், செல்வமணி, ஜெயராமன், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் நடந்த விழாவில் பிரம்மன் சதுக்கம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்துக்கு தொகுதி அ.தி.மு.க. பிரமுகர் அய்யப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

புதுச்சேரி மாநில பாரத ரத்னா எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் 500 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக பிரம்மன் சதுக்கம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு, அறக்கட்டளையின் தலைவர் கைலாசநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் துணைத் தலைவர் பரசுராமன், பொருளாளர் வாழுமுனி மற்றும் ஆறுமுகம், ஏழுமலை, நேரு, கோபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஏம்பலம் தொகுதி கோர்க்காடு கிராமத்தில் நடைபெற்ற விழாவில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ரேணுகாதேவி ராமசாமி தலைமையில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. விழாவில் ஜெயலலிதா பேரவை முன்னாள் செயலாளர் தட்சிணாமூர்த்தி கட்சி கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முத்துக்குமரன், ராஜராஜன், ராமமூர்த்தி, கலியமூர்த்தி, செல்வராணி, காவியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மணவெளி தொகுதி அ.தி.மு.க. சார்பில் தவளக்குப்பத்தில் நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆர். படத்துக்கு தொகுதி நிர்வாகி குமுதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் தொகுதி செயலாளர் மூர்த்தி, அவைத்தலைவர் சிவராமராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பூரணாங்குப்பத்தில் எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் தலைவர் பார்த்தசாரதி தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் கிளிஞ்சல்மேடு சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அசனா எம்.எல்.ஏ., தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருநள்ளாறு மற்றும் காரைக்கால் பகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Next Story