நெமிலியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டை தாக்கிய 3 பேர் கைது


நெமிலியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jan 2020 10:30 PM GMT (Updated: 18 Jan 2020 4:58 PM GMT)

நெமிலியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பனப்பாக்கம், 

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் மோகன் (வயது 48). இவர் நேற்று முன்தினம் இரவு காணும் பொங்கலை முன்னிட்டு பனப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். பெருவளையம் செல்லும் சாலையில் இவர் ரோந்து சென்றபோது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இவரை இடிப்பது போல் வந்தனர்.

உடனே ஏட்டு மோகன் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். மோட்டார்சைக்கிளில் இருந்து இறங்கி வந்த 3 பேரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் மோகனுடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சாலையோரம் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து மோகனை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஓடிவந்து 3 ேபரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த மோகனை சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பனப்பாக்கம் அருகே உள்ள நெல்லூர்பேட்டையை சேர்ந்த லோகே‌‌ஷ் (22), பனப்பாக்கம் காலனியை சேர்ந்த பரத் (22), கோமே‌‌ஷ் (22) என்பது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story