திருப்பத்தூர் அருகே, ஆரோக்கிய இந்தியா சைக்கிள் ஊர்வலம் - கலெக்டர் 3 கிலோ மீட்டர் ஓட்டி சென்றார்
ஆரோக்கிய இந்தியா சைக்கிள் ஊர்வலத்தில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுடன் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் 3 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி சென்றார்.
திருப்பத்தூர்,
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களிடையே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் யோகா, உடற்பயிற்சி போன்ற பல்வேறு விதமான உடற்பயிற்சிகளை ஊக்குவித்து, இளைஞர்கள் ஆரோக்கியமாகவும், வலிமையுடன் வாழ்ந்திட இந்திய பிரதமரால் ஆரோக்கிய இந்தியா திட்டம் கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 18-ந் தேதி ஆரோக்கிய இந்தியா திட்டத்தின் கீழ் உடற்பயிற்சி சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த கிராம ஊராட்சிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆரோக்கிய இந்தியா நாளையொட்டி சைக்கிள் ஊர்வலம் நடத்தப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம், கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பாக ஆரோக்கிய இந்தியா சைக்கிள் ஊர்வலம் ஆதியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தொடங்கியது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போதுள்ள சூழ்நிலையில் இளைஞர்கள், பெண்கள், பொதுமக்களின் உடல் உழைப்பு மிகவும் குறைந்து விட்டது. நாம் நடக்கும் தூரம் குறைந்துவிட்டது. எங்கு செல்ல வேண்டுமானாலும் மோட்டார் சைக்கிள் அல்லது பஸ், வாகனங்களில் தான் செல்கிறோம். இதனால் நமது உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம்.
இதனைத் தவிர்த்து தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி, சைக்கிள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் உடல் ஆரோக்கியம் பெறும். அனைவரும் நோய் வராமல் இருக்க உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கலெக்டர் சிவன்அருள் சைக்கிளை ஓட்டிக்கொண்டு 3 கிலோமீட்டர் தூரம் சேலம் மெயின் ரோடு வரை பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள், சுய உதவிக்குழுவினர் ஆகியோருடன் சென்றார். இதில் கர்நாடக மாநிலம் பெங்களூரு கலெக்டர் சக்திவேல், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அருண்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாவதி, தயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story