கீழ்பென்னாத்தூரில் கலவரம்: முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் மோதல்; வீடுகள், கார், மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
கீழ்பென்னாத்தூரில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வீடுகள், கார், மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமானது.
கீழ்பென்னாத்தூர்,
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 40), விவசாயம் மற்றும் கிணறு வெட்டும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் உள்ள காலனியை சேர்ந்தவர் ஏழுமலை (50), விவசாயி. இவர் திருவண்ணாமலை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். நாராயணனும், அவரது பங்காளியான ஜெயபால் என்பவரும் பொதுவாக உள்ள ஒரு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் ஜெயபால் தனது நிலத்தை ஏழுமலையிடம் குத்தகைக்கு விட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நாராயணனுக்கும், ஏழுமலைக்கும் இடையே பொதுவான கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விளை நிலங்களில் பாய்ச்சுவதில் தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கருங்காலிகுப்பம் கடை வீதியில் உள்ள கூத்தாண்டர் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த போத்தராஜா, கூத்தாண்டவர் ஆகிய சாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு டிராக்டரில் வைக்கப்பட்டு ஊர்வலம் செல்வதற்கு தயார் நிலையில் இருந்தது.
இரவு 9 மணியளவில் கோவில் முன்பு அனைத்து தரப்பினரும் கூடியிருந்தனர். அப்போது அங்கிருந்த நாராயணனுக்கும், ஏழுமலைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அது இருதரப்பினர் மோதலாக மாறி கைகலப்பு, கல்வீச்சு காரணமாக கலவரம் ஏற்பட்டது.
கல்வீச்சில் சாமி சிலைகள் சேதம் அடைந்தது. மேலும் குளக்கரை தெருவில் உள்ள ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் என 15-க்கும் மேற்பட்ட வீடுகள், ஒரு கார், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்களை பெட்ரோல் ஊற்றி எரித்து நாசம் செய்தனர்.
இந்த சம்பவத்தில் நாராயணன், சக்திவேல், சதீஷ், ஏழுமலை, மோகன் உள்பட இரு தரப்பிலும் 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து இந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், பாதுகாப்பு பணிக்காகவும் அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக கருங்காலிகுப்பம் பகுதி முழுவதும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story