காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கைப்பற்றியது மைசூரு மாநகராட்சி மேயராக தஸ்நீம் தேர்வு துணை மேயரானார், ஸ்ரீதர்
மைசூரு மாநகராட்சியை காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கைப்பற்றியது.
மைசூரு,
மைசூரு மாநகராட்சியை காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கைப்பற்றியது. புதிய மேயராக ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த தஸ்நீம் மற்றும் துணை மேயராக காங்கிரசை சேர்ந்த ஸ்ரீதர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநகராட்சி மேயர் தேர்தல்
மைசூரு மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா 22 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 18 இடங்களிலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி வாகை சூடின.
இந்த தேர்தலில் எந்தகட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் காங்கிரசும், ஜனதாதளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து மைசூரு மாநகராட்சியை கைப்பற்றியது. கூட்டணி ஒப்பந்தப்படி ஒரு ஆண்டுக்கு மேயர் பதவி காங்கிரசுக்கும், துணை மேயர் பதவி ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி காங்கிரசை சேர்ந்த புஷ்பலதா ஜெகன்நாத் மேயராகவும், துணை மேயராக ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சபி அகமதுவும் பதவி ஏற்றனர்.
காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி
அவர்களது பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து ஜனவரி 18-ந்தேதி (அதாவது நேற்று) மைசூரு மாநகராட்சிக்கு புதிய மேயர், துணை மேயர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த தேர்தலிலும் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொண்டது. கடந்த முறை மேயர் பதவியை காங்கிரஸ் வகித்ததால் இந்த தடவை மேயர் பதவி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. துணை மேயர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த தேர்தலில் மாநகராட்சி கவுன்சிலர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சட்டசபை மேல்-சபை உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். பா.ஜனதா சார்பில் 18 வார்டில் நின்று போட்டியிட்டு கவுன்சிலராக தேர்வான குரு விநாயக் என்பவர் போலி சாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் 64 உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 73 பேர் வாக்களிக்க தகுதி படைத்திருந்தனர்.
வேட்பு மனு தாக்கல்
இந்த தேர்தலை தனியாக எதிர்கொண்ட பா.ஜனதா மேயர் பதவியை கைப்பற்ற தீவிர முயற்சியில் இறங்கியது. இதற்காக கவுன்சிலர்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டது. இதனால் இந்த தேர்தலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இத்தகைய சூழ்நிலையில் மேயர், துணை மேயர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நேற்று காலை 7 மணிக்கு மைசூரு மாநகராட்சி கூட்ட அரங்கில் தொடங்கியது. காலை 7.30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் ெதாடங்கியது. ஜனதாதளம் (எஸ்) சார்பில் தஸ்நீம் (22-வது வார்டு கவுன்சிலர்) மேயர் பதவிக்கும், காங்கிரஸ் சார்பில் ஸ்ரீதர் (38-வது வார்டு கவுன்சிலர்) துணை மேயர் பதவிக்கும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
70 பேர் பங்கேற்பு
அதுபோல் பா.ஜனதா சார்பில் மேயர் பதவிக்கு கீதாஸ்ரீ யோகானந்த், துணை மேயர் பதவிக்கு சாந்தம்மா வடிவேலுவும் மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு வாபஸ் பெற கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் யாரும் வேட்பு மனுக்களை வாபஸ் பெறவில்லை.
இந்த தேர்தல் கூட்டத்தில் 64 கவுன்சிலர்களும், எம்.எல்.ஏ.க்கள், மேல்-சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஆனால் பா.ஜனதாவை சேர்ந்த ராமதாஸ் எம்.எல்.ஏ., காங்கிரசை சேர்ந்த தன்வீர்சேட் எம்.எல்.ஏ., பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா ஆகியோர் பங்கேற்கவில்லை. இதனால் மொத்தமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 70 ஆக குறைந்துபோனது.
மேயர்- தஸ்நீம்,
துணை மேயர்-ஸ்ரீதர்
இதைதொடர்ந்து மேயர் பதவிக்கான தேர்தல் முதலில் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரியும், மண்டல கமிஷனருமான யஷ்வந்த் அறிவித்தார். அதன்படி நடந்த மேயர் தேர்தலில் தஸ்நீமுக்கு 47 பேரின் ஆதரவு கிடைத்தது. இதனால் புதிய மேயராக தஸ்நீம் அறிவிக்கப்பட்டார். பா.ஜனதா மேயர் வேட்பாளர் கீதாஸ்ரீ யோகானந்திற்கு 23 ஓட்டுகள் மட்டுமே விழுந்தது. இதனால் அவர் தோல்வி அடைந்தார்.
இதைதொடர்ந்து நடந்த துணை மேயர் தேர்தலில் காங்கிரசை சேர்ந்த ஸ்ரீதருக்கு 47 வாக்குகளும், பா.ஜனதாவை சேர்ந்த சாந்தம்மா வடிவேலுவுக்கு 23 வாக்குகளும் கிடைத்தது. இதனால் துைண மேயராக ஸ்ரீதர் தேர்வு செய்யப்பட்டார்.
புதிய மேயர், துணை மேயர் பதவிகளை காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கைப்பற்றியதால் இருகட்சிகளின் தொண்டர்களும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய மேயர், துணை மேயருக்கு இரு கட்சியினரும் மலர்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
பி.ஏ. பட்டதாரி
புதிய மேயராக தேர்வாகியுள்ள தஸ்நீம், 2 தடவை மைசூரு மாநகராட்சி கவுன்சிலராக இருந்துள்ளார். பி.ஏ. பட்டதாரியான இவரது கணவர் செய்யது சமியுல்லா தொழில் அதிபர் ஆவார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
துணை மேயராக தேர்வான ஸ்ரீதர் பி.ஏ. பட்டதாரி ஆவார். இவரது மனைவி அஞ்சு. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். முன்னாள் மேயரான புருஷோத்தமனை மாநகராட்சி தேர்தலில் தோற்கடித்து கவுன்சிலராக தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story