மஞ்சூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மஞ்சூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
மஞ்சூர்,
குந்தா தாலுகாவின் தலைமையிடமாக மஞ்சூர் விளங்கி வருகிறது. இந்த தாலுகாவில் கீழ்குந்தா, பிக்கட்டி என 2 பேரூராட்சிகளும் குந்தா (மேல்குந்தா), முள்ளிகூர், இத்தலார், பாலகொலா ஆகிய 4 ஊராட்சியும் உள்ளடங்கியது. இதில் கீழ்குந்தா, மேல்குந்தா, கிண்ணக்கொரை, மஞ்சூர், தொட்டகம்பை, எடக்காடு, எமரால்டு, தங்காடு, கன்னேரி, மந்தனை, ஒரநள்ளி, மணியட்டி, மீக்கேரி, பெங்கால், கோக்கலாடா, மஞ்சக்கம்பை, இத்தலார் உட்பட பல்வேறு கிராமமக்கள் வருமான சான்றிதழ், சிட்டா, பட்டா, சாதி சான்று உட்பட வருவாய் சம்பந்தப்பட்ட தேவைகளை அருகாமையில் உள்ள குந்தா தாலுகா அலுவலகத்திற்கு சென்று அன்றாட அலுவல்களை பூர்த்தி செய்கின்றனர்.
இதேபோன்று கீழ்குந்தா, பிக்கட்டி ஆகிய 2 பேரூராட்சிக்குட்பட்ட மக்கள் தங்களது அடிப்படை தேவைகள், இறப்பு, பிறப்பு சான்றிதழ், குடிநீர், கழிவுநீர், நடைபாதை, தெருவிளக்கு, தொகுப்பு வீடு, பசுமை வீடு உள்பட தேவைகளை பூர்த்தி செய்ய அருகாமையில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் எளிதில் சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்து விடுகின்றனர்.
இந்தநிலையில் மேற்கண்ட 4 ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்கள் தாலிக்கு தங்கம் திட்டம், கர்ப்பிணி பெண்கள் திட்டம், பசுமை வீடு, தொகுப்பு வீடு, மகளிர் இரு சக்கர வாகன திட்டம் உட்பட அனைத்து அரசு சார்ந்த சலுகைகளை பெற ஊட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர். இதனால் அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
குந்தா ஊராட்சிக்குட்பட்ட கிண்ணக்கொரை கிராமத்திலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று வருவதில் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. மேற்கண்ட ஊராட்சிக்குட்பட்ட மக்கள் பெரும்பாலும் அன்றாட ஏழை கூலி தொழிலாளர்கள் உள்ளனர். இவ்வாறு சென்றாலும் ஒரே நாளில் இவர்களது தேவை பூர்த்தியாகாது.
இதனால் கூலி இழப்பும் ஏற்படுவதுடன் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவது வேதனைக்குரியதாகும். மேலும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஊட்டி சென்று வந்ததிலும் பல்வேறு இன்னல்களை சந்தித்தோம். இதனை கருத்தில் கொண்டு மஞ்சூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குந்தா பகுதியில் வசிக்கும் எங்களின் நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக மஞ்சூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை குந்தா தாலுகா அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story