80 அரசு பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி - மாணிக்கம் தாகூர் எம்.பி. தகவல்


80 அரசு பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி - மாணிக்கம் தாகூர் எம்.பி. தகவல்
x
தினத்தந்தி 18 Jan 2020 10:45 PM GMT (Updated: 18 Jan 2020 7:01 PM GMT)

மாவட்டத்தில் உள்ள 80 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

விருதுநகர், 

அரசு மேல்நிலைப்பள்ளிகளை ஆய்வு செய்ய சென்றபோது அங்கு மாணவ-மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி இல்லாத நிலை நீடிப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள 80 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிசெய்து தர வரும் நிதியாண்டில் நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் ஆதாரங்கள் இல்லாத பள்ளிகளிலும் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி இல்லாத நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்தின் ஒப்புதலுடன் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அதனை பராமரிக்கும் பொறுப்பு மகளிர் சுயநிதி குழுவிடம் ஒப்படைக்கப்படும். விருதுநகர் சிவன் கோவில் அருகே உள்ள சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வசதி இல்லாததால் அது பயன்பாட்டுக்கு வராத நிலை உள்ளது. அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நடப்பு நிதியாண்டிற்கான தொகுதி மேம்பாட்டு பணிகளுக்கான பட்டியல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பணிகள் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விருதுநகர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டபோதிலும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுகுறித்து மத்திய நீர்வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் வலியுறுத்தி கூடுதல் நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும். விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி-மதுரை பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story