உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்


உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Jan 2020 11:00 PM GMT (Updated: 18 Jan 2020 7:07 PM GMT)

ராமநாதபுரம் அருகே உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம், 

மத்திய அரசு உத்தரவின் அடிப்படையில் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சகத்தின் மூலம் பொதுமக்களிடையே உடல் ஆரோக்கியத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ‘பிட் இந்தியா மிஷன்’ என்ற நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் ஊரக பகுதிகளில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ராமநாதபுரம் யூனியன் சூரன்கோட்டை ஊராட்சி பகுதியில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதனை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்து, ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

சூரன்கோட்டை ஊராட்சியில் இருந்து தொடங்கிய ஊர்வலம், முதுனாள் சாலை வழியாக தேவிபட்டினம் புறவழிச்சாலை சந்திப்பு வரை சென்று மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வந்து நிறைவடைந்தது.

இதில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், போலீஸ் துணை சூப்பிரண்டு வெள்ளைத்துரை, தொருவளூர் ஊராட்சி தலைவர் பஜ்ருதீன் மற்றும் அரசு அலுவலர்கள், ஊரக உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story