புதுச்சேரி கடற்கரை சாலையில் பாரம்பரிய கார் கண்காட்சி
புதுச்சேரி கடற்கரை சாலையில் பாரம்பரிய கார் கண்காட்சி நடந்தது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி கடற்கரை சாலையில் பாரம்பரிய கார் கண்காட்சி நடந்தது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
பாரம்பரிய கார் கண்காட்சி
புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறை, சென்னை ஹெரிட்டேஜ் மோட்டார்ஸ் கிளப் ஆகியவை இணைந்து கடந்த 2010-ம் ஆண்டு முதல் பாரம்பரிய கார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. அதன்படி இந்த ஆண்டும் பாரம்பரிய கார் கண்காட்சி கடற்கரை சாலையில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் சென்னை, புதுச்சேரியில் இருந்து 72 பாரம்பரிய கார்கள், 25 மோட்டார் சைக்கிள்கள் பொதுமக்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியில் ஆஸ்டின் (1927-ம் ஆண்டு), டாட்ஜ் (1933), மோரிஸ் (1935), ஜாகுவார் (1936) சிட்ரன் (1946), சிங்கர் (1947), பேர்ட் முஸ்டாங் (1967), வி டபிள்யூ பீட்டில் (1966), மோரிஸ் மைனர் 1000 உள்ளிட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த கார்களின் அருகே அதன் உரிமையாளர் பெயர், கார் தயாரிக்கப்பட்ட ஆண்டு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் வைக்கப்பட்டிருந்தன.
அதேபோல் பழங்கால மோட்டார் சைக்கிள்களும் விதவிதமான மாடல்களில் பொதுமக்களின் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
‘செல்பி’
இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சுற்றுலாத் துறை அதிகாரிகள் மற்றும் கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வியந்தனர். ஆர்வமிகுதியில் அந்த கார்களின் அருகில் நின்று ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.
இதுகுறித்து ஹெரிட்டேஜ் மோட்டார்ஸ் கிளப் உறுப்பினர் ரஞ்சித் பிரதாப் கூறுகையில், ‘இந்த பாரம்பரிய கார் அணிவகுப்பு 8 கார்களுடன் தொடங்கப்பட்டது. படிப்படியாக உயர்ந்து தற்போது 72 கார்கள் வரை இடம்பெற்றுள்ளன. முன்னோர்கள் பயன்படுத்திய இந்த கார்களின் அணிவகுப்பை பார்த்து பொதுமக்கள் வியப்பதுடன் இதில் தங்களுக்கு பிடித்த கார்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி விடுவதாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது என்றார்.
இந்த கார்கள் அனைத்தும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டுச் செல்கின்றன.
Related Tags :
Next Story