மாவட்ட செய்திகள்

வாழப்பாடி அருகே தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு 11 பேர் மீது வழக்கு + "||" + Varanasi Jallikattu sued 11 persons for violating prohibition

வாழப்பாடி அருகே தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு 11 பேர் மீது வழக்கு

வாழப்பாடி அருகே தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு 11 பேர் மீது வழக்கு
வாழப்பாடி அருகே தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இது தொடர்பாக 11 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாழப்பாடி,

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதிகளில் உள்ள சில கிராமங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி வங்காநரி ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதற்காக கிராம மக்கள் வனப்பகுதிக்கு சென்று வலையை விரித்து வங்காநரியை பிடித்து வந்து ஜல்லிக்கட்டு நடத்துகின்றனர்.


ஆனால் வங்காநரி வனவிலங்கு பட்டியலில் உள்ளதால் அதனை பிடித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வனத்துறை தடை விதித்தது. இருப்பினும் வனத்துறையினர் எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தாலும் அதனை பொருட்படுத்தாமல் வனப்பகுதிக்குள் நுழைந்து வங்காநரியை பொதுமக்கள் பிடித்து வந்து ஜல்லிக்கட்டு நடத்துவதும், அவர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

வங்காநரி ஜல்லிக்கட்டு

இந்த ஆண்டு தடையை மீறி வங்காநரியை பிடித்து ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என வனத்துறை அறிவித்து இருந்தது. மேலும், இது தொடர்பாக வாழப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தும், சுவரொட்டிகள் ஒட்டியும் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் வாழப்பாடி அருகே உள்ள சின்னமநாயக்கன்பாளையம் கிராம மக்கள் நேற்று அதிகாலையில் வனத்துறையினரின் கண்காணிப்பையும் தாண்டி கொட்டவாடி வனப்பகுதிக்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் வங்காநரியை வலைவிரித்து பிடித்தனர். இதைத் தொடர்ந்து அதற்கு மாலை அணிவித்து, கழுத்தில் பணம் கட்டி மேள, தாளங்கள் முழங்க மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் சிறப்பு பூஜை செய்தனர். இதையடுத்து கோவில் வளாகத்தில் வங்காநரியை ஓட விட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

11 பேர் மீது வழக்கு

இந்த விழாவை காண சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். கோவில் வளாகத்தை சுற்றி வங்காநரி ஓடி வந்த போது அங்கு கூடியிருந்த பொது மக்கள் ஆரவாரம் செய்தனர். இதற்கிடையே தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடைபெறுவதை அறிந்த வாழப்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு நடைபெற்ற வங்காநரி ஜல்லிக்கட்டை தடுத்து நிறுத்தினர்.

மேலும் பொதுமக்களிடம் இருந்து வங்காநரியை மீட்டு கொட்டவாடி வனப்பகுதியில் விட்டனர். தடையை மீறி வங்காநரியை பிடித்து ஜல்லிக்கட்டு நடத்தியதாக சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 11 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 55 ஆயிரம் அபராதம் விதித்தனர். வனத்துறையினரின் தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடைபெற்ற சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. புதுக்கோட்டை, இடையாத்தூரில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 45 பேர் காயம்
புதுக்கோட்டை கவிநாடு கண்மாய் மற்றும் இடையாத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 45 பேர் காயமடைந்தனர்.
2. களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு
களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
3. திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பிளஸ்-2 மாணவர் பலி - 11 பேர் காயம்
திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பிளஸ்-2 மாணவர் பலியானார். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
4. ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணிடம் ரூ.6¼ லட்சம் மோசடி டாக்டர் உள்பட 4 பேர் மீது வழக்கு
ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.6¼ லட்சம் மோசடி செய்த டாக்டர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. கோவையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்
கோவையில் கோலாகலமாக நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினார்கள்.