வேளாண்மை எந்திரங்கள் வாடகை மையம் அமைக்க மானியம் - கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை எந்திரம் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தூத்துக்குடி,
வேளாண்மை பணியாளர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, மாநில அரசு வேளாண்மை எந்திரமயமாக்குதல் திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிக விலையுள்ள வேளாண்மை எந்திரங்கள் மற்றும் கருவிகளை சொந்தமாக வாங்கி பயன்படுத்த இயலாததை கருத்தில் கொண்டு, அவற்றை குறைந்த வாடகையில் பெற்று பயனடைய ஏதுவாக வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார அளவிலான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வாடகை மையம் அமைத்திட 40 சதவீத மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வாடகை மையங்கள் அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வாடகை மையங்களை அமைக்க விருப்பம் உள்ளவர்கள் வேளாண்மை பொறியியல் துறையினால் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களின் எந்திரங்கள், கருவிகளை தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து விண்ணப்பத்தை அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் வேளாண்மை அலுவலகத்தில் அளித்திட வேண்டும். பின்னர் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண்மை எந்திரங்கள் மற்றும் கருவிகளின் மொத்த தொகையை சம்பந்தப்பட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளின் முகவர்களிடம் வரைவோலையாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயரில் செலுத்த வேண்டும். அதன்பின் உரிய வழங்கல் ஆணை வழங்கப்பட்டு வேளாண்மை எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படும்.
வேளாண்மை எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க விரும்புவோர் தூத்துக்குடி வேளாண் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ஜாகீர் உசேனிடம் 9443694245 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் கோவில்பட்டி உபகோட்ட உதவி செயற்பொறியாளர் பழனிசாமியிடம் 9442049591 என்ற எண்ணிலும், திருச்செந்தூர் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் சங்கர்ராஜிடம் 9443157710 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story