சேரன்மாதேவியில் பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


சேரன்மாதேவியில் பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Jan 2020 4:00 AM IST (Updated: 19 Jan 2020 2:03 AM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவியில் பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சேரன்மாதேவி, 

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியைச் சேர்ந்தவர் அழகு. இவருடைய மகன் குமார் என்ற அம்பலம் (வயது 36) பால் வியாபாரி. இவர் நேற்று மாலையில் சேரன்மாதேவி ராமர் கோவில் அருகே சென்று கொண்டு இருந்தார்.

அப்போது, அங்கு மறைந்து இருந்த மர்ம நபர்கள் திடீரென்று குமாரை வழிமறித்தனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். அப்போது மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் குமாரை சரமாரியாக வெட்டினார்கள். இதில் தலை, கைகளில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். இதுகுறித்து உடனடியாக சேரன்மாதேவி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். வீரவநல்லூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிக்குப்பழியாக குமாரை மர்ம நபர்கள் வெட்டினார்களா? அல்லது வேறு ஏதாவது முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story