குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம்


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 18 Jan 2020 10:30 PM GMT (Updated: 18 Jan 2020 9:37 PM GMT)

மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அச்சன்புதூர், 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று மாலையில் நடந்தது. மாவட்ட தலைவர் செய்யது சுலைமான் தலைமை தாங்கினார். இமாம் அப்துல் மஜீத் ஆலிம் கிராஅத் ஓதினார். நகர செயலாளர் செய்யது மசூது வரவேற்று பேசினார். முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., காங்கிரஸ் மூத்த நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ், ஜமாத்துல் உலமா சபை மாநில தலைவர் காஜா முகைதீன், முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர்.முன்னதாக முஸ்லிம் எம்.எல்.ஏ.க்களின் சட்டமன்ற பேரூரை 2-ம் பாகத்தை முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன் வெளியிட்டார்.

மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. எனவே நாட்டில் இறையாண்மையும், சமய நல்லிணக்கமும் நிலைத்திட மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் பழைய நடைமுறையே தொடர வேண்டும். இதனை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது.

மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கேரளா, பஞ்சாப் மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதேபோன்று தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை மத்திய பா.ஜனதா அரசு திரும்ப பெறும் வரையிலும் தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் தனுஷ்குமார் எம்.பி., தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. சதன் திருமலைகுமார் உள்பட திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

Next Story