அம்மாபட்டி-தளி சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


அம்மாபட்டி-தளி சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 Jan 2020 3:45 AM IST (Updated: 19 Jan 2020 3:42 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபட்டி-தளி இணைப்பு சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தளி,

உடுமலையை அடுத்த ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அம்மாபட்டி கிராமம் உள்ளது. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள இங்கு சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு உடுமலையில் இருந்து வாளவாடி வழியாகவும், பெரியகுளம் பிரிவு வழியாகவும் பஸ் மற்றும் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அம்மாபட்டி பகுதியில் கரும்பு பிரதான பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. அது தவிர கால்நடை வளர்ப்பு வாழை மற்றும் தென்னை சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விவசாயம் சம்பந்தப்பட்ட இடுபொருட்கள் கொண்டு செல்வதற்கு அம்மாபட்டியில் இருந்து தளி வரையிலும் இணைப்பு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையின் வழியாக அம்மாபட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் திருமூர்த்திமலைக்கு சென்று வருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மாபட்டி-தளி இணைப்பு சாலை சேதமடைந்தது. இதனால் சாலை மேடு பள்ளமாக காட்சி அளித்தது. இதன் காரணமாக வாகனஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்ததுடன் வாகனங்கள் பழுதாகி ஆங்காங்கே நின்றுவிடுவதும் தொடர் கதையாக இருந்து வந்தது.

இதையடுத்து சேதமடைந்த அம்மாபட்டி- தளி இணைப்பு சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாலையில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன.. முதற்கட்ட பணிகள் நிறைவுற்ற நிலையில் இரண்டாம் கட்ட பணிகளுக்காக அதில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு உள்ளன. ஆனால் பணிகள் தொடங்குவதில் காலதாமதம் நிலவி வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் அதில் செல்ல முடியவில்லை.

இதன் காரணமாக விவசாயம் சார்ந்த இடுபொருட்கள் மற்றும் விளை பொருட்களை சரக்கு வாகனங்களில் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி சாலையில் பரவிக்கிடக்கும் கற்களால் இருசக்கர வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்தும் விடுகின்றனர்.

இதனால் வாகன ஓட்டிகள், விவசாயிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அம்மாபட்டி-தளி இணைப்பு சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story