கும்மிடிப்பூண்டி அருகே, மினி டெம்போ கவிழ்ந்து 2 பேர் பலி - 11 பேர் படுகாயம்


கும்மிடிப்பூண்டி அருகே, மினி டெம்போ கவிழ்ந்து 2 பேர் பலி - 11 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 19 Jan 2020 4:15 AM IST (Updated: 19 Jan 2020 3:57 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே மினி டெம்போ கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

கும்மிடிப்பூண்டி,

சென்னை கோயம்பேட்டில் இருந்து காய்கறி, பூ மூட்டைகள் மற்றும் பழங்களை ஏற்றிக்கொண்டு மினி டெம்போ ஒன்று ஆந்திர மாநிலம் சத்யவேடு நோக்கி வந்து கொண்டிருந்தது. 22-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பயணம் செய்த அந்த டெம்போவை ஆந்திர மாநிலம் சத்யவேட்டை அடுத்த ராஜகுண்டா கிராமத்தை சேர்ந்த கோடீஸ்வரன் (வயது 36) ஓட்டிச் சென்றார்.

அந்த டெம்போ திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள பெரவள்ளூர் பகுதியில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கியவர்களை அங்கு இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஆந்திர மாநிலம் சத்யவேடு அடுத்த என்.எம்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த பரந்தாமன்(60) மற்றும் அலமேலு மங்காபுரம் கிராமத்தை சேர்ந்த சேகர் (55) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் கீழ்முதலம்பேட்டை சேர்ந்த மலர் (55), கவரைப்பேட்டையை சேர்ந்த சுசீலா (47), ஏ.என்.குப்பத்தை சேர்ந்த சித்ரா (60), சத்யவேடு கண்ணாவரம் கிராமத்தை சேர்ந்த கமலம்மாள் (48) என 4 பெண்கள் மற்றும் டெம்போ டிரைவர் கோடீஸ்வரன் (36), டில்லி (35), சோமசுந்தரம் (44), குப்பையா (60), வி.சேகர் (45), நரசிம்மலு (40) வெங்கடாதிரிபாளையத்தை சேர்ந்த சின்னையன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தால் சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story