பா.ஜனதா எம்.பி. பிரக்யா சிங்குக்கு விஷ ரசாயனம் அனுப்பிய டாக்டர் கைது


பா.ஜனதா எம்.பி. பிரக்யா சிங்குக்கு விஷ ரசாயனம் அனுப்பிய டாக்டர் கைது
x
தினத்தந்தி 19 Jan 2020 4:30 AM IST (Updated: 19 Jan 2020 4:10 AM IST)
t-max-icont-min-icon

பாரதீய ஜனதா எம்.பி. பிரக்யா சிங் தாக்குருக்கு விஷரசாயனம் அனுப்பிய டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

பாரதீய ஜனதா எம்.பி. பிரக்யா சிங் தாக்குருக்கு விஷரசாயனம் அனுப்பிய டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

விஷ ரசாயன பார்சல்கள்

மத்தியபிரதேசத்தை சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர். மராட்டிய மாநிலம் மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய பிரக்யா சிங் தாக்குர் தற்போது எம்.பி.யாக இருக்கிறார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் பிரக்யா சிங் தாக்குருக்கு 4 மர்மபார்சல்கள் வந்தன.

போபால் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த இந்த பார்சல்களில் விஷ ரசாயனம் இருந்ததாக தெரியவந்தது. அந்த பார்சல்கள் சிலவற்றில் உருது மொழியில் எழுதப்பட்ட கடிதங்களும் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்தபிரக்யா சிங் தாக்குர் அங்குள்ள கம்லா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

டாக்டர் கைது

பிரக்யா சிங் தாக்குர் எம்.பி.க்கு விஷ ரசாயனத்தை அனுப்பிய ஆசாமியை கண்டுபிடிக்க மத்திய பிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில்,மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டம் தனேகாவில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் செய்யது அப்துல் ரகுமான் கான் (வயது35) என்பவர் தான் இந்த விஷ ரசாயனத்தை அனுப்பி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய பிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நாந்தெட் வந்து அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணை

விசாரணையில், போலீசில் சிக்காமல் இருக்க அவர் தனது மொபைல் போனை வீட்டில் வைத்து விட்டு அந்த பார்சல்களை அவுரங்காபாத், நாக்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று தனித்தனியாக அனுப்பியது தெரியவந்தது.

இவர் தனது தாய் மற்றும் சகோதரர் ஆகியோருக்கு பயங்கரவாத தொடர்பு இருப்பதாகவும், அவர்களை கைது செய்ய வேண்டும் என்று சில அரசு அலுவலகங்களுக்கு கடிதம் எழுதிய வழக்கில் ஏற்கனவே கைதானவர் என்பதும் தெரியவந்தது.

அவர் என்ன காரணத்துக்காக விஷ ரசாயனத்தை பிரக்யா சிங் தாக்குர் எம்.பி.க்கு அனுப்பினார் என்பதை கண்டறியமத்திய பிரதேச பயங்கரவாத தடுப்பு படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story