சாய்பாபா பிறப்பிடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் இன்று முழு அடைப்பு
சாய்பாபா பிறப்பிடம் குறித்த சர்ச்சையை தொடர்ந்து ஷீரடியில் இன்று முழு அடைப்பு நடக்கிறது.
மும்பை,
சாய்பாபா பிறப்பிடம் குறித்த சர்ச்சையை தொடர்ந்து ஷீரடியில் இன்று முழு அடைப்பு நடக்கிறது.
ஷீரடி சாய்பாபா
மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ஷீரடியில் சாய்பாபா கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற ஆன்மிக சுற்றுலாத் தலமாக விளங்கும் இந்த கோவிலுக்கு தினமும் வெளிநாட்டினர் உள்பட ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாய்பாபா, பர்பானி மாவட்டத்தில் உள்ள பாத்ரியில் பிறந்ததாக ஒரு தரப்பினரால் நம்பப்பட்டு வரும் நிலையில், பாத்ரி நகரத்தை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
பாத்ரியை மேம்படுத்தினால் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கான முக்கியத்துவம் குறைந்து விடும் என ஷீரடியை சேர்ந்தவர்கள் அஞ்சுகின்றனர். எனவே பாத்ரி, சாய்பாபாவின் பிறப்பிடம் என்பதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இன்று முழு அடைப்பு
இந்த புதிய சர்ச்சையை தொடர்ந்து, பாத்ரியை மேம்படுத்தும் மாநில அரசின் நடவடிக்கையை கண்டித்து ஷீரடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு அடைப்பு போராட்டத்திற்கு உள்ளூர் மக்கள் மற்றும் வியாபாரிகள் அழைப்பு விடுத்து உள்ளனர்.
இதன் காரணமாக ஷீரடியில் உள்ள கடைகள், ஓட்டல்கள், விடுதிகள் அடைக்கப்படுகின்றன. மேலும் அங்கு பஸ், ஆட்டோக்கள் ஓடாது என்றும் கூறப்படுகிறது.
ஆனால் ஷீரடியில் சாய்பாபா கோவில் வழக்கம் போல் திறந்து இருக்கும் என்றும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story