ஆழமான வாசிப்பே பிரதானம்: ‘நல்ல புத்தகங்கள் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடும்’ - ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் பேச்சு
நல்ல புத்தகங்கள் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடும் என்றும், ஆழமான வாசிப்பே புத்தகத்தின் பிரதானம் என்றும் சென்னை புத்தக கண்காட்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.திருப்புகழ் பேசினார்.
சென்னை,
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சார்பில் 43-வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 9-ந்தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது.
புத்தக கண்காட்சியின் 10-வது நாளான நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெ.திருப்புகழ், வெ.இறையன்பு மற்றும் பபாசி நிர்வாகிகள் வைரவன், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ‘என் வாசிப்பு உலகம்’ என்ற தலைப்பில் மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளர் வெ.திருப்புகழ் பேசியதாவது:-
புத்தகம் படித்தல் என்பது மிகவும் நல்ல விஷயம். செல்போன், டி.வி., சினிமா என சிறிய திரைகளிலேயே நமது கவனம் ஆட்கொள்ளப்பட்டு விடுகிறது. அந்த அளவு நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம். வெறுமனே புத்தகங்களை படித்தல் என்பது சரியாகாது. தன்னையும், தான்சார்ந்த உலகத்தையும் அறிந்து படிப்பதே நல்ல புத்தகம் படிக்கும் தன்மையாகும்.
கதையானாலும், காவியம் ஆனாலும் எந்த புத்தகமாக இருந்தாலும் குறிப்பு எடுத்து படிப்பதே தலை சிறந்தது. படிப்பதில் ஆழ்ந்து படிப்பது, அவசரமாக படிப்பது என்ற இருவகை உண்டு. இதில் ஆழ்ந்து படிப்பதே சிறந்த படிப்பு. ஒரு புத்தகத்தை படிக்கும் முன்பு எழுத்தாளரின் பார்வை, எதற்காக இப்புத்தகம் எழுதப்பட்டது?, எதற்கு தீர்வு கொடுக்கிறது? எந்தக் கோட்பாட்டை வைத்து எழுதப்பட்டிருக்கிறது?, எவை ஆதாரமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது?, எத்தகைய அனுமானம் கையாளப்பட்டிருக்கிறது?, என்ன முடிவு சொல்லப்பட்டிருக்கிறது?, அந்த முடிவை ஏற்றால் என்ன ஆகும்? என்ற 8 கேள்விகளை நாம் கையாளவேண்டும். இந்த 8 கேள்விகளையும் ஆராய்ந்து பார்த்து அந்த புத்தகத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். அதுதான் சிறந்த புத்தக வாசிப்பு ஆகும்.
இத்தகைய ஆழமான வாசிப்பு தான் ஒரு புத்தகத்தின் பிரதானமாகும். ஒரு நல்ல புத்தகங்கள் நமது வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடும். நமது வாழ்க்கையின் அழிக்கமுடியாத அத்தியாயமாக மாறிவிடும்.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் புத்தகத்தில் உள்ள ஏதாவது ஒரு பகுதி நிச்சயம் அதற்கு தீர்வு சொல்லும். தகுதியான நல்ல புத்தகங்கள் சிலவற்றை ஆழ்ந்து படித்தாலே போதும். நிச்சயம் அறிவு விசாலம் ஆகும். வாழ்வின் மேன்மை புலப்படும்.
தற்போதுள்ள இளைஞர்கள் ஆன்லைன் என்னும் குறுகிய திரையில் சிக்குண்டு இருக்காமல், அதிலிருந்து மீண்டு புத்தகங்கள் வாசிப்பு என்னும் அகன்ற திரையை எட்டிப்பிடிக்க வேண்டும். உண்மையான ஓய்வு நேரத்தை புத்தகங்கள் வாசிப்பில் செலவிடுவோர் வாழ்க்கை வளமான நேர்கோட்டில் செல்வது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
‘மனிதர்களை வாசிக்கிறேன்’ எனும் தலைப்பில் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் இயக்குனரும், கூடுதல் தலைமை செயலாளருமான வெ.இறையன்பு பேசினார்.
Related Tags :
Next Story