ரவுடி பினு ‘ஸ்டைலில்’ நடுரோட்டில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவர்


ரவுடி பினு ‘ஸ்டைலில்’ நடுரோட்டில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவர்
x
தினத்தந்தி 19 Jan 2020 4:38 AM IST (Updated: 19 Jan 2020 4:38 AM IST)
t-max-icont-min-icon

ரவுடி பினு ‘ஸ்டைலில்’ சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர், நடுரோட்டில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பூந்தமல்லி, 

வாலிபர் ஒருவர், நடுரோட்டில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சியில், பிறந்தநாள் கொண்டாடும் வாலிபருக்கு அவரது நண்பர்கள் ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை மற்றும் கிரீடம் அணிவித்து, சுமார் 4 அடி நீளமுள்ள வாளை பரிசாக வழங்குகிறார்கள்.

அதை வாங்கும் வாலிபர், நடுரோட்டில் மோட்டார்சைக்கிள் மீது வைக்கப்பட்டு உள்ள கேக்கை வாளால் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அந்த கேக்கில் வக்கீல் என்பதற்கான அடையாளம் பொறிக்கப்பட்டு இருந்தது.

இந்த வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், பிறந்தநாளை கொண்டாடிய வாலிபர், மதுரவாயலை அடுத்த எம்.எம்.டி.ஏ.காலனி பகுதியைச் சேர்ந்த காமேஷ் என்பது தெரிந்தது. அவர், திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருவதாக கூறப்படுகிறது.

இவர்தான் கடந்த 11-ந் தேதி நள்ளிரவில் அதே பகுதியில் நடுரோட்டில் தனது நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடியதும், அப்போது நண்பர்கள் பரிசாக வழங்கிய வாளால் கேக் வெட்டியதும் தெரிந்தது. இதை அவரது நண்பர்களே தங்களது செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவுசெய்து உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல ரவுடி பினு, தனது பிறந்தநாளை மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் படைசூழ பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடி னார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பிறகு ரவுடி பினு ‘ஸ்டைலிலேயே’ பட்டாக்கத்தியால் கேக் வெட்டும் கலாசாரம் பரவி வருவதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோல் பொது இடங்களில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story