பெண்கள் உடை மாற்றும் வீடியோ வெளியான விவகாரம் : கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கோவை பெட்ரோல் பங்கில், பெண் ஊழியர்கள் உடை மாற்றும் வீடியோ வெளியான விவகாரத்தில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை,
கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர்கள் உடைமாற்றும் அறையில் செல்போன் கேமராவில் ரகசியமாக வீடியோ எடுக்கப்பட்டது. அதில் பதிவான காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
16 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவை எடுத்தவர்கள் மீதும், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாய்பாபாகாலனி போலீசில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மணிகண்டன் என்பவர் தன் மனைவியுடன் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே பங்கில் மேற்பார்வையாளராக சுபாஷ் (வயது 30) என்பவரும் இருந்தார்.
அந்த பங்கில் பணியாற்றும் பெண்கள் உடை மாற்றும் அறையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுபாஷ் தனது செல்போனில் பெண்கள் உடை மாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்து உள்ளார். இதை அறிந்த மணிகண்டனின் மனைவி, வீடியோ விவகாரம் குறித்து தனது கணவரிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், சுபாசை பிடித்து அவரது செல்போனில் பதிவு செய்து இருந்த பெண்கள் உடை மாற்றும் வீடியோவை அழித்துவிட்டு செல்போனை உடைத்து வீசியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த கோவை திருச்சி ரோடு ஹைவேஸ் காலனியை சேர்ந்த சுபாஷ், ஆபாச வீடியோவை சமூகவலைத்தளங்களில் பரப்பிய தனியார் தொலைக்காட்சி நிருபர் மருது என்ற மருதாச்சலம் (40), அதற்கு உடந்தையாக இருந்த ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்த மணிகண்டன் (35) ஆகிய 3 பேரை கடந்த 8-ந் தேதி போலீசார் கைதுசெய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டம், தகவல் தொழில்நுட்பம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சுபாஷ், மருது என்ற மருதாச்சலம், மணிகண்டன் ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் நேற்று உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகல் சிறையில் இருக்கும் அவா்கள் 3 பேரிடம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story