நெல்லை அருகே பயங்கரம்: பெண் உயிரோடு எரித்துக்கொலை - குடிபோதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைது


நெல்லை அருகே பயங்கரம்: பெண் உயிரோடு எரித்துக்கொலை - குடிபோதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைது
x
தினத்தந்தி 19 Jan 2020 5:50 AM IST (Updated: 19 Jan 2020 5:50 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே பெண் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார். குடிபோதையில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குளம், 

நெல்லை அருகே சீதபற்பநல்லூர் அடுத்துள்ள கீழகருவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயா (31). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், 9 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சுரேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் மது குடித்துவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை அன்று சுரேஷ் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து ஜெயாவிடம் தகராறு செய்தார். தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ், குடிபோதையில் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து ஜெயா மீது ஊற்றி தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதனால் அலறி துடித்த ஜெயா, ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்‘ என அபயக்குரல் எழுப்பினார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பலத்த தீக்காயங்களுடன் உடல் கருகிய நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதுதொடர்பாக சீதபற்பநல்லூர் போலீசார், சுரேஷ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயா நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். முன்னதாக ஜெயா அளித்த வாக்குமூலத்தில், தன் மீது கணவர் சுரேஷ் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து எரித்ததாக கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லை அருகே மனைவியை கணவரே உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story